இளநரையை தடுக்க உதவும் கறிவேப்பிலை எண்ணெய்
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.
இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.
இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.
செய்முறை:
முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். வானல் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.
தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.
எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.