குழந்தைக்கு பவுடர் போடலாமா?
அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது. பவுடரில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசம் தொடர்பான பிரச்னைகளையும், ஆபத்தான நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். பவுடரின் துகள்கள் எளிதாக சுவாசம் வழியாக, நுரையீரலைச் சென்று சேர்ந்துவிடும். சுவாசப் பாதையால், அந்த பவுடர் துகள்கள் உள்ளே போவதைத் தடுக்க முடியாது. குறைமாதக் குழந்தைகள், பிறவி இதயக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குறைந்த அளவு பவுடர் கூட நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம்.
அதனால் குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக படவுர் பயன்படுத்த வேண்டும். குழந்தையின் உடலில் நேரடியாக பவுடரைக் கொட்டாமல், பெற்றோர் தங்கள் கைகளில் தட்டி, அதைக் குழந்தைகளுக்குப் போடலாம். குழந்தைகள் தாங்களாகவே பவுடர் போடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பவுடர் டப்பாவை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்கெனவே போட்ட பவுடரை துடைத்து எடுக்காமல், மேலும் மேலும் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும்.
குழந்தைக்கு ஒவ்வொருமுறையும், டயாப்பர் (Diaper) மாற்றும்போது ஏற்கெனவே பூசியிருக்கும் பவுடரைத் துடைத்து எடுத்துவிடவும். குழந்தையின் தோல் மடிப்புகளில் இருக்கும் பவுடரை, நன்றாகத் துடைத்து எடுக்கவும். பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பொதுவாக ஒவ்வாமை குறைவான (Hypo Allergenic) அல்லது ஆர்கானிக் முறையில் தயாரித்த பவுடர்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
* குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடர் போட வேண்டாம். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் தரமான பவுடரைப் போடலாம்.
* தரமான பவுடரைப் பார்த்து வாங்குங்கள். மருத்துவர் ஏதேனும் பவுடரைப் பரிந்துதைத்தால் அதையே குழந்தைக்கு போடலாம்.