ஆரோக்கியம்மருத்துவம்

முதுமையில் உடல் ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டியவை

முதுமை என்பதும் ஓர் பருவமே என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் பல தொல்லைகளுக்கு இடையே மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நிறையவே உண்டு. ஒருவர் நடுத்தர வயதிலிருந்தே தன்னை முதுமைப் பருவத்திற்காக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எண்ணங்களும், செயல்பாடுகளும் ஓரே சீராகவும், ஆணித்தரமாகவும் இருந்து செயல்பட்டால் முதுமையில் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும். வயதான பருவத்திலும் வசந்தத்தை அனுபவிக்க இதோ சில வழிமுறைகள். தீவிரமாக கடைபிடியுங்கள், குறுகிய காலத்திலேயே நிறைய பலன்களை அனுபவிப்பீர்கள். இது ஓர் நிதர்சனமான உண்மை!



ஐம்பது வயதிற்கு மேல் பலருடைய உடல், பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடன் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

முதல் முறையாக பரிசோதனை செய்யும் போது முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியம். ரூ.4ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை செலவாகலாம். அடுத்த ஆண்டு பரிசோதனைக்குச் செல்லும்போது, முன்பு செய்துக் கொண்ட எல்லா பரிசோதனையும் செய்ய வேண்டியது இல்லை. முதல் பரிசோதனையில் எது சரியாக இல்லையோ அதை மட்டும் செய்துக் கொண்டால் போதும். இதனால் மறைந்திருக்கும் நோய்களை எளிதில் கண்டறிந்து அந்நோய்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தக்க சிகிச்சையளிக்க முடியும்.

வயது ஆக ஆக பசியும் ருசியும் குறையும், அதனால் உண்ணும் உணவின் அளவும் தரமும் குறையும். இதன் விளைவு உடல் இளைத்தல் மற்றும் சத்துணவு குறைவால் தொல்லைகள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க இதோ சில எளிய வழிகள்.

உணவில் அதிகம் புரதச் சத்து அதிகமுள்ள எல்லா பருப்பு வகைகள், கொத்துக் கடலை, பட்டாணி, காளான், முட்டையின் வெள்ளைக் கரு, சோயா, கோதுமை, சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணம்: கம்பு, ராகி, சோளம், தினை போன்றவை. தண்ணீர் தாகம் இல்லாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர்அருந்த வேண்டும். மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைக்க வேண்டும், எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும், உடலில் எந்த நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உப்பின் அளவைச் சற்று குறைத்து உண்பது நல்லது.

முதியவர்கள் தங்கள் உடல்நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு தங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் நடப்பது நல்லது. அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



தடுப்பூசி அவசியம் வயது ஆக ஆக நோய் எதிர்ப்புச் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வரும். இதனால் பல தொற்றுநோய்கள் வர வாய்ப்பு அதிகம் ஆகிறது. சில தொற்றுநோய்களுக்கு தடுப்பூசி மூலம் அந்நோய்கள் வராமலேயே தடுத்து நலமாய் வாழ முடியும்.

முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் உயிருக்கே ஆபத்தைக் கூட விளைவிக்கும். இதற்கு தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதும்.

ஓரு சிலர் மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் எதுவுமில்லை. தேவைப்படுவோருக்கு நிமோனியா தடுப்பு ஊசியோடு இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் சேர்த்து ஒரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம்.

உங்களது தேவைகளை நீங்களே செய்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள். பின்னால் உங்களுக்குச் சிரமம் இருக்காது. இது மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனியாக வாழ ஒரு தைரியத்தை ஏற்படுத்தும்.

வயது ஆக ஆக மனதளவில் பந்த, பாசங்களை குறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். ஒரேடியாக, மனைவி, பிள்ளை, பேரன், பேத்தி என்று பாசத்தைக் கொட்டக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், அம்முதியவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கொஞ்சம், கொஞ்சமாக பாச வலையிருந்து மீண்டு, தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீரைப்போல வாழக் கற்றுக்கொள்வது முதியவர்களுக்கு நல்லது.

முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிகவும் அவசியம். முதுமையில் மனிதர்கள் பக்க பலமாக இருப்பதைவிட நாம் முதுமையை எதிர்நோக்கி இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே நமக்கு பக்கபலமாகும். நடுத்தர வயதிலிருந்தே முதுமைக்காலத்திற்காக ஓரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நல்ல உடல் நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மனஉறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் மேற்கொண்டால் முதுமை தேயும் பிறையாக அல்லாமல் முழுநிலவாக மலரும்.




 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker