பெண்ணின் மெனோபாஸ் காலகட்டம்
மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.
பயிற்சியும், அன்பும், கவனிப்பும் இருக்கும் பட்சத்தில் பூப்புநிற்றலும் சுப நிகழ்வாகிறது. பெண்ணின் கருமுட்டைகள் பாலுறவால் கருவுற்றால் அவள் கர்ப்பமாகிறாள். கருவுறாவிட்டால் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்ணின் வயது அதிகமாகும்போது கரு முட்டை எண்ணிக்கை குறையத் தொடங்கி பூப்பு முடிவில் அவை உற்பத்தியாவதில்லை. பெண் பூப்பு எய்தும் முன் படிப்படியாக அவள் வளர்ந்து பூப்பெய்துகிறாள். அதற்கு மாறாக பூப்பு முடிவுக்கு வரும் போது படிப்படியாக அவள் உடல் முதிர்ச்சியடைந்து முழுமையை அடைகிறாள்.
இந்த நிறைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த கால கட்டத்தில் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.
வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய இடங்களுக்குக் குடியேறுதல், புதிய சூழல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கரு முட்டை வெளிப்படாத நிலை ஏற்பட்டு மாதவிடாய் வராமலிருக்கலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.
நம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு உள்ளங்கால் முதல் தலை வரை வெப்பம் பரவல், சிலசமயம் காது வழியாக வெப்பம் வேகமாக வெளிவருவது போல உணர முடியும். எலும்புத் தேய்மானம், எலும்பு எளிதில் முறியும் நிலை, இரவில் திடீரென்று அதிக வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், மனதை ஒருமைப்படுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் ஒருவித வறட்சி, சிறுநீரை அடக்க முடியாமை, தோலில் மாற்றம், நீட்சித்தன்மை குறைதல், இதயக் கோளாறுகள் ஆகிய தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.
பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம். பெண் பூப்பெய்தல் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் பூப்பு முடிவும் எதிர்பார்க்கப்பட வேண்டும். அதற்குத் தற்காப்புகள் செய்யப்படுவது அவசியம். பெண் பூப்பெய்திய உடன் நல்ல ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகிறது. மனமகிழ்ச்சியானநிகழ்வுகள் நடக்கின்றன.
ஆனால், பூப்பு முடிவின்போது ஏற்படும் மாற்றங்களை அந்தப் பெண் மட்டும் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதையும் ஒரு முக்கிய நிகழ்வாக நினைத்து சிறிது ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணுதல், உளுந்தங்களி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். உற்றார், உறவினர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் பூப்பு முடிவும் ஒரு சுப நிகழ்வாகவே அமையும். பூப்பு முடிவுக்குப் பின்னரும் பெண்கள் பல வெற்றிகளை, சாதனைகளைச் செய்ய முடியும்.
பூப்பு எய்தியது முதல் தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஒழுங்கான மாதவிடாய், பிற கருப்பைக் கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். பூப்பு முடிவின் போது அதிக ரத்தப்போக்கு இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். தாய்மார்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் செயல் திறனைப் பாதுகாக்க சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவ்வாசனங்கள் கருப்பை தன் தொழிலைத் திறம்படச் செய்யத் தூண்டப்படுகிறது. இத்துடன் சில வாழ்வியல் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
அதிகாலையில் எழுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் சுறுசுறுப்பாக செயல்படுதல், இரவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம். ரசாயனம் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் பூப்பு நிற்றலின் போது ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண் தன்னை ஃபிரஷ்ஷாக உணர வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரொமான்டிக் மனநிலையும் உங்களை இளமையாக உணர வைக்கும்.
மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்திய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமாண்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.
இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள்.