உறவுகள்புதியவை

விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா? – புதிய தகவல்கள்

சண்டை போட்டு முடிந்த பின்பு சிந்திப்பதும், சமாதானம் செய்வதும் அதிகப் பலனை தராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது முக்கியமல்ல. அந்த பேச்சுவார்த்தை எதில் போய் முடிகிறது என்பது தான் முக்கியம். குடும்ப விஷயங்களை பேசும்போது பிரச்சினைக்குரிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் இடையே அறிமுகமாகும் வேற்றுநபரால் பிரச்சினை ஏற்படக்கூடும். அந்த வேற்றுநபர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மாவாகக் கூட இருக்கலாம். அவர்கள் நன்மை செய்பவராகவே இருக்கலாம். ஆனால் தன்னை விட வேறுநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது உறவுகளுக்கு இடையில் பிரச்சினை தோன்றுகிறது’ என்கிறார், ஜான் காட்மேன்.

தொலைக்காட்சி நடிகை சுபாங்கி ஆத்ரே சொல்கிறார்:

‘‘சினிமா, தொலைக்காட்சி நடிகைகளை பொறுத்தவரை திருமண வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமுமில்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். பெண்களில் நிறைய பேர் சந்தேகத்திற்குள்ளாகிறார்கள். தேவையில்லாமல் துணை ஏற்படுத்தும் சந்தேகத்தால் திருமண முறிவுகள் அதிகரிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்தான்! திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டவர்கள் விவாகரத்தில் இருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். என்னோடு வேலை செய்யும் பலருடைய பிரச்சினை இது தான். கணவன் – மனைவி இடையே நம்பிக்கை இன்மையால் வாழ்க்கை துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த விஷயத்தில் என் கணவர் அப்படி அல்ல. அவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிரச்சினைக்குரிய விஷயங்களை ஓரங்கட்டிவிடுகிறது’’ என்கிறார்.

மனநல மருத்துவர் பூஜா ஆனந்த் சர்மாவின் கருத்து பெண்களும் விவாகரத்துக்கு ஒருவகையில் முக்கிய காரணமாகிவிடுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.

‘‘முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது’’ என்கிறார், பூஜா.

அவசரகதியில் தம்பதியர் எடுக்கும் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக செய்துவிடும் என்கிறார் தொலைக்காட்சி நடிகை வந்தனா பதாக். அவர் சொல்கிறார்: ‘‘இப்போது எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம். இதுவும் கணவன் – மனைவி பிரிவுக்கு காரணம். அவர்கள் குடும்பத்திற்கென்று நேரத்தை ஒதுக்கினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தன் காலில் தானே நிற்கும் பலம் இருக்கும் தைரியத்தில் இன்று திருமண வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டால் நாளை தனிமை என்னும் பயங்கரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாகரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். மனதாலும் சரி உடலாலும் சரி அந்தப் பாதிப்புகள் உடனே வெளியே தெரியாது. அது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். படித்தவர்கள் கூட இதுபற்றி யோசிப்பதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்’’ என்கிறார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker