குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்
பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
எல்லோரும் விரும்புவது தம்மக்களை நல்லமுறையில் வளர்க்க வேண்டும், அவர்களை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்பதை தான். ஆனால் பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
கருத்தரிப்பிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை குழந்தை பராமரிப்பின் மிக முக்கியமான காலம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சிலவேளைகளில் குழந்தைகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.
உதாரணமாக, கருத்தரிப்பு உறுதியானதுமே சில தாய்மார்கள் குழந்தை சிவப்பாக இருக்கவேண்டுமென்று குங்குமப்பூ சாப்பிடுவர். நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைப்போல கருப்பட்டி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. அதே வேளையில் இவற்றை சாப்பிடுவதால் ஒரு பலனுண்டு. தாய்க்கும் சேய்க்கும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.
அதைப் போன்று குழந்தை பிறக்க சரியான காலம் நிர்ணயித்து, அக்குறிப்பிட்ட நேரத்தில் மகப்பேறு பார்க்க மருத்துவரை கட்டாயப்படுத்துவது சிலநேரங்களில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உருவாக்கலாம். சரியான நேரம் என்று ஒன்றினை கணிக்கவே முடியாது. மருத்துவர் உத்தேசமாக சொல்வதுதான் நேரம்.
பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குறைந்த எடை, குறைப்பிரசவம், உடற்குறைபாடுகள், தாயின் உடல்நிலை பாதிப்பு போன்றக் காரணங்கள் தவிர்த்து குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது தவறு. பிறந்த குழந்தையை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் மென்மையாக, மிதவெப்ப நீரில் குளிப்பாட்டுவதும் தலையைச் சுத்தம் செய்வதும் அவசியம்.
ஆறுமாதங்கள் முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. பசும்பால், பவுடர் பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் குறையும் பட்சத்தில், தாய் அதிக அளவில் பசும்பால், தயிர், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உட்கொள்வதினால் பால் சுரக்கும். குறித்தக் காலத்தில் பால் ஊட்டுவது அவசியமற்றது. குழந்தை அழுதால் மட்டுமே புகட்டுவது சிறந்தது.
தாய் அமர்ந்த நிலையில்தான் பால் ஊட்டவேண்டும். தாய்ப்பால் அருந்தும் தருணங்களில் குழந்தை மலம் கழிப்பது இயற்கை. இது வயிற்றுப்போக்கு அல்ல. இதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை.
மலம் கழித்தபின் சுத்தம் செய்ய கையோ, பஞ்சோ, துணியோ உபயோகிக்காமல், நேரடியாக குளிர்ந்தநீரில் கழுவுவது அவ்விடத்தில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தை அதிக நேரம் தூங்குவது நல்லது. துணித் தொட்டிலைத் தவிர்த்து, தரையில் மெத்தை விரித்து தாய்க்கு அருகாமையிலோ அல்லது மார்பின் மீதோ தூங்க வைப்பது நல்லது.
ஆறு மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். முதலில் தயிர், மசித்த வாழைப்பழம், பழச்சாறு என தொடங்கி, படிப்படியாக, தயிர்சாதம், பருப்பு சாதம், காய்கறிசூப், இளநீர், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்கலாம்.
அந்தி சாய்ந்த நேரங்களில் குழந்தைகள் அழுவது இயற்கை. அதற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பதும், கிரைப் வாட்டர் மற்றும் நாட்டு மருந்துகள் தருவதும். எந்த பலனையும் அளிக்காது. தாயின் தாலாட்டு அல்லது பதிவு செய்யப்பட்ட தாலாட்டு இசை, மற்றும் குறைவான வெளிச்சம் தரும் மின்விளக்கு போன்ற சூழல் நல்ல பலனை அளிக்கும்.
சில குழந்தைகள் விரல் சூப்பும். இதைத் தவிர்க்க தாய்மார்கள் விரலில் வேப்பெண்ணெய் தடவுவது உண்டு. இது தவறானது. விரல் சூப்புவது இயற்கை அளித்த நல்லதொரு வரம். இத்தகைய குழந்தைகள் மிக அமைதியாகவும், தெளிந்த சிந்தனையுடன் உருவாகுவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. விரல் சூப்புவதால் பசியின்மை, பல் அமைப்பில் குறைப்பாடு போன்றவை ஏற்படும் என்பது தவறான கருத்து.
பதினோரு மாதத்தில் குழந்தைக்கு முடி எடுப்பது, மொட்டை அடிப்பது வழக்கம். பெரும்பாலும் இத்தகைய சடங்குகளை வீட்டிலோ அல்லது சுகாதாரமுள்ள இடங்களில் நடத்துவது நல்லது. பல குழந்தைகள் இச்சடங்குகளுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கைகால் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதை நீண்ட அனுபவத்தில் கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நீண்ட பயணம், சுகாதாரமற்ற நீரில் குளிப்பது, அசுத்தமான சூழல் போன்றவைதான்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கூட்டம் கூட்டி நடத்துவார்கள். கூட்டம், இரைச்சல் இவற்றால் குழந்தைகள் பயத்தினாலும் சோர்வினாலும் அல்லல்படுவதுண்டு. முதல் பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடிவிட்டு இரண்டாம் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து கொண்டாடுவது சிறந்தது.