எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும். ஹேர் கண்டிஷனிங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
கண்டிஷனர் என்பது, நம் கூந்தலை எண்ணெய்த்தன்மையுடன் வைத்து வறட்சியிலிருந்து காப்பதற்கே. இயற்கையாகவே நம் ஸ்கால்ப், எண்ணெய்ப் பசையைச் சுரந்துகொண்டிருக்கும். அதனால், ஸ்கால்ப்பில் எப்போதும் எண்ணெய்த்தன்மை இருக்கும். எனவே, எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும்.
ஹேர்கலரிங், டையிங், ப்ளீச் போன்ற கெமிக்கல் சிகிச்சைகள் எடுத்துகொண்டவர்கள், இரண்டு அடுக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்டிஷனர்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் கூந்தலைப் பாதுகாக்கும். இதுபோன்ற சிகிச்சைகள் எடுத்துகொள்ளாதவர்கள், நார்மல் கண்டிஷனரையே உபயோகிக்கலாம்.
ஷாம்பு பயன்படுத்தி தலையை இரண்டு முறை அலசிய பிறகு, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் கண்டிஷனருடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மேலிருந்து கீழ்நோக்கி கண்டிஷனரை அப்ளை செய்து, 3 நிமிடத்துக்கு அப்படியே விட்டுவிடவும். அதன்பின், சுத்தமான நீரால் கூந்தலை அலசினால், வறட்சி நீங்கி பளபளக்கும்.
கண்டிஷனர் க்ரீம், ஜெல், ஃபோம் எனப் பல வகை தன்மையில் உள்ளது. டிரை ஹேர் உடையவர்கள், க்ரீம் போன்ற கண்டிஷனர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும். கர்லி ஹேர் உடையவர்கள், ஜெல் கண்டிஷனரை தேர்வுசெய்யலாம். ஸ்டெர்யிட் ஹேர் உடையவர்களுக்கு, க்ரீம் பேஸ்ட் அல்லது ஃபோம் பேஸ்ட் கண்டிஷனர்கள் பெஸ்ட் சாய்ஸ்.
அதிக எண்ணெய்ப் பசை கூந்தல் உடையவர்கள், பொடுகுப் பிரச்னைகள் உடையவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள், கண்டிஷனர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கண்டிஷனர் வாங்கும்போது, உங்களின் கூந்தலின் தன்மையை மனதில்கொண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ, காஸ்மெடிக் கடைகளிலோ வாங்குவது நல்லது.
அவகேடா பழத்தின் சதைப் பகுதியை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, கூந்தலில் மட்டும் தேய்த்து, 5 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
பூந்திக்கொட்டையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தி ஒருமுறை கூந்தலை அலசவும். இது, இயற்கையான கண்டிஷனராக உங்கள் கூந்தலை காக்கும்.
வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, கால் கப் தண்ணீடில் கலக்கவும். இதை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.