கோடையில் காரமான உணவுகளை சாப்பிட்டால் என்னவாகும்
வெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.
குளிர்காலத்தில், மழைக்காலத்தில் நம் உடலுக்கு வெப்பம் தேவை. அப்போது காரமான, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், அவை உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைக் கொடுக்கும். அதே நேரத்தில் கோடைக்காலத்தில் இயல்பாகவே உடலில் நீர்வறட்சி ஏற்படும். அப்போது காரமான உணவுகளைச் சாப்பிட்டால் உடல் சூடாகி, மேலும் நீர் வறட்சியே ஏற்படும். அதனால், ஏப்பம், வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். சிலருக்கு ரத்த வாந்திகூட வரலாம்.
கோடைக்காலத்தில், காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் உணவு கலந்து அல்சர் பாதிப்புகள் உண்டாகும். இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுச் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறு குடலுக்கு, உணவை உட்கிரகிக்கும் திறன் குறைந்துபோகும்.
வெயில் காலத்தில் காரமில்லாத, எளிதில் செரிமானமாகக்கூடிய, எண்ணெயில் பொரிக்காத உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
கோடைக்காலத்தில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அசிடிட்டி அதிகமாகும். இதனால் உடல்சூடு, வயிற்றில் புண்கள், செரிமானக் கோளாறுகள், வயிற்று மந்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பொதுவாக, வெளியில் உள்ள தட்பவெப்பநிலையைச் சமாளிக்கும்விதமாக நம் உணவு முறை இருக்க வேண்டும். வெயில் காலத்தில் இனிப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். இவை, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இளநீர், நுங்கு, பதநீர் போன்ற துவர்ப்பும், இனிப்பும் நிறைந்த பானங்கள் உடலுக்கு மிகவும் நல்லவை. காரம், புளிப்பு, உப்பு ஆகிய சுவையுடைய உணவுப் பொருள்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது.
கோடைக்காலத்தில், சாதம், கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றை முதல் நாள் தயாரித்து ஒருநாள் வைத்திருந்து சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
நீர் ஆகாரங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பழங்கள் இனிப்புச் சுவையுடன்தான் இருக்கும். அதனால் அனைத்து வகைப் பழங்களையும் சாப்பிடலாம். அதேபோல எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அது, வயிற்று மந்தம், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.