தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கோடையை இனிமையாக்கும் குழந்தைகளின் பாரம்பரிய விளையாட்டுகள்

நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.

கோடையில் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கிறீர்களா குட்டீஸ். அதற்காக செல்போன் விளையாட்டில் மூழ்கிவிடாதீர்கள். செல்போன் விளையாட்டுகளைவிட சுவாரசியமான விளையாட்டுகள் பல நமது பாரம்பரியத்தில் உண்டு. மரபு விளையாட்டுகள் விளையாடுவதற்கு விறுவிறுப்பாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும். அதே நேரத்தில் கோடையின் வெயில் நம்மை தாக்காமலும் காக்கும். வீட்டிற்குள்ளும், நிழலிலும் அமர்ந்து விளையாடும் சில பாரம்பரிய விளையாட்டுகளை பார்ப்போமா…

நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.

சொக்கட்டான் (தாயக்கட்டம்), சில்லுக்கோடு (நொண்டியாட்டம்), கண்ணாமூச்சி (கண்டுபிடித்தல் ஆட்டம்), திருடன் போலீஸ், தட்டாங்கல் (சுட்டிக்கல் அல்லது கல்லு பிடித்தல்), கிச்சுக்கிச்சு தாம்பாளம், குலைகுலையாய் முந்திரிக்கா, பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், கில்லி (சில்லுக்குச்சி), பம்பரம், கோலியாட்டம், பல்லாங்குழி, ஏறுதழுவுதல், கபடி, உறியடித்தல், கோகோ, மாட்டுவண்டி பந்தயம், சைக்கிள் பந்தயம், இளவட்டக் கல் தூக்குதல் என நமது பாரம்பரிய விளையாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில் சொக்கட்டான் , தட்டாங்கல், கிச்சுக்கிச்சு தாம்பாளம், பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், பரம்பரம், கோலி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள் வீட்டிற்குள்ளும், நிழல் உள்ள இடங்களிலும் எளிமையாக விளையாடலாம்.

பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கு வலுவூட்டும். சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு மற்றும் தைரியம் போன்ற பண்புகளை வளர்க்கக்கூடியது. விரைவாக செயல்படும் ஆற்றல், அறிவுத்திறன், கூர்மைத்திறன், நினைவாற்றல் மேம்பாடு, மனபலம் தரக்கூடியது. உறவு வளர்க்கும் ஆற்றல், கூடிவாழும் இயல்பை வளர்க்கும் திறனும் நமது விளையாட்டு களுக்கு உண்டு.

தாயக்கட்டம்

கோடை மற்றும் மழைக் காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுகளில் முக்கியமானது சொக்கட்டான் எனப்படும் தாயக்கட்டம். ஐந்துக்கு ஐந்து சதுரங்கள் கொண்ட கட்டத்தில் அல்லது, 4 பக்கமும், ஐந்திற்கு மூன்று என்று அமைந்த கட்டங்களால் ஆன தளத்தில் ஆடும் விளையாட்டு இது. நான்கு பக்கமும் தலா ஒருவர் அமர்ந்து விளையாடலாம்.

எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டோ அல்லது தனியாகவோ விளையாடலாம். ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். பகடைக் காய்களில் விழும் எண்களுக்கு ஏற்ப கட்டங்களில் காய்களை நகர்த்தி விளையாடுவார்கள். அடுத்தவர் காய் வைத்துள்ள கட்டத்தில் சரியாக முடியும் வகையில் எண்ணிக்கை வந்தால் அந்த காய் வெட்டுப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். மீண்டும் அவர்கள் தாயம் போட்டுத்தான் காயை நகர்த்த வேண்டும். வெட்டியபின் கட்டத்தை ஒரு சுற்று சுற்றி, பழம் அடைய செல்ல வேண்டும். முதலில் நான்கு காய்களையும் மீட்டு கொண்டு வந்து பழமாக்குபவர் வெற்றி பெற்றவராவார்.

கிராமப்புறங்களில் சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் போன்றவற்றை காய்களாக பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கில் வண்ணவண்ண காய்களும், பகடைகளும் கிடைக்கின்றன. தாயக்கட்ட விதிமுறைகள் இடங்களுக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். சொக்கட்டான் ஆட்டம் சில மணி நேரங்களுக்கு சுவாரஸ்யமாக பொழுதுபோக்க உதவும்.

பல்லாங்குழி

சிறுமிகள் மற்றும் பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்கும் விளையாட்டு பல்லாங்குழி. பல்வேறு உலக நாடுகளிலும் பல்லாங்குழி ஆட்டம் சிறிய மாறுதல்களுடன் விளையாடப்படுகிறது. மரப்பலகையில் சிறுசிறு குழிகளுடன் இருக்கும் விளையாட்டு சாதனத்தில் முத்துகளை நிரப்பி விளையாடுவார்கள். ஒரு குழியில் உள்ள முத்துகளை எடுத்து, அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொன்றாக இட்டு, முத்து தீரும் இடத்தில் வெற்றுக் குழி வரும்போது, அவர் அடுத்த கட்டத்தில் உள்ள முத்துகளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார். இப்படி போட்டியாளர் இருவர் மாறி மாறி ஆடும்போது, கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நடைபெறும். யார் நிறைய முத்துகள் சேர்க்கிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார். இதிலும் சில ஆட்ட முறைகள் உள்ளன. விதிமுறையிலும் சிறிது வேறுபாடுகள் வைத்து விளையாடுவது உண்டு.

சிறுவர்களின் கணித அறிவை வளர்ப்பது, புத்திசாலித்தனமாக செயல்படும் ஆற்றலை வளர்ப்பது பல்லாங்குழி ஆட்டத்தின் சிறப்புகளாகும்.

ஆடுபுலியாட்டம்

அறிவுத்திறனை வளர்க்கும் வியூக விளையாட்டு ஆடு புலி ஆட்டம். இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இந்த ஆட்டம் விளையாடப் படுகிறது. முக்கோணம் மற்றும் செவ்வகம் இணைந்ததாக ஆடுபுலி ஆட்டத்தின் கட்டங்கள் இருக்கும். இதை எளிதாக சாக்பீஸ் கட்டிகளில் வரைந்து கொண்டு ஆடுவது மக்களின் வழக்கம். இதில் 3 புலிக் காய்கள் (கற்கள்), 10 அல்லது 15 ஆடு காய்கள் (சிறுகற்கள்) இருக்கும். ஒவ்வொரு கட்டம் சந்திக்கும் புள்ளியில் காய்களை வைக்க வேண்டும். புலியானது ஆடு காய் இருக்கும் புள்ளியைத் தாண்டி அடுத்த புள்ளியில் தாவும் வகையில் வைத்துவிட்டால் ஆடு ஆட்டமிழக்கும். அடுத்தடுத்த புள்ளியில் இரு ஆடுகள் இருந்தால் புலியால் தாவ முடியாது. அதேபோல இரு பக்கமும் புலி தாவ முடியாத அளவு ஆடுகள் மறைத்துக் கொண்டால் புலிக் காயை நகர்த்தியவர் தோல்வி காண்பார். இந்த ஆட்டத்தில் ஆடுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தினால் வெற்ற பெற முடியும்.

கோலி- பம்பரம்

இதேபோல கோலிக் குண்டுகள் மற்றும் பரம்பர விளையாட்டுகளையும் வீட்டிலிருந்த படியும், மரத்தடி நிழலிலும் எளிதாக விளையாடலாம். கோலி ஆட்டத்தில் பல வகைகள் உண்டு. விதிமுறைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுவது உண்டு.

பம்பரங்களை பொழுதுபோக்காக சுற்றி விளையாடுவது, குழுவாக இணைந்து விளையாடுவது உண்டு.

திருடன்-போலீஸ்

கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன்-போலீஸ். 5 குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு. சிறுதுண்டு காகிதத்தை எடுத்து சதுரமாக வெட்டிஅதில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என எழுதி மடித்து தரையில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுப்பர். பின்பு போலீஸ் யார் என்பர்.அந்த சீட்டு உள்ளவர் நான் தான் போலீஸ் என்றவுடன் மற்ற நால்வரும் அமைதியாக இருப்பார்கள். போலீஸ் சீட்டு வைத்து உள்ளவர் திருடன் சீட்டு வைத்திருப்பவரை கண்டுபிடிக்க வேண்டும். திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். அதை கூர்ந்து நோக்கி நால்வரில் திருடனை கண்டறிய வேண்டும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக் கணிக்கும் உளவியல் பயிற்சியைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு.

இனிமை மிகுந்த பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி, கோடையின் கொடுமையில் இருந்து தப்புவோம். அறிவையும், சமூகப் பண்பையும் வளர்த்து மகிழ்வோம்!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker