ஆரோக்கியம்புதியவை

அப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி

அப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், இதற்கு சிகிச்சை என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வயிற்றில் வலி வந்ததும், அது வாயுக்கோளாறாக இருக்குமா, இல்லையெனில் அல்சர் பிரச்சினையா என்பதே பெரும்பாலானோரின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாயு மட்டுமே பிரச்சினை, அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது சிறுநீரக கல், ஹெர்னியா, பித்தப்பை கல், அப்பென்டிசைட்டிஸ், குடல் அழற்சி நோய்கள் என பல்வேறு நோய் தாக்குதலின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள். குறிப்பாக, அப்பென்டிசைட்டிசுக்கான அறிகுறிகள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

சிறுநீரக கல்லின் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. அப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், அதன் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்புக்கு குடல்வால் என்று பெயர். இதன் நீளம் சுமார் 7 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை இருக்கும். இதில் ஏற்படும் நோய் தொற்றினால் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு உருவாகும் தேவையில்லாத கட்டி அல்லது அதில் ஏற்படும் கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.

உடலுக்குள் நுழையும் என்டெரோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், எஸ்செரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்கள் சிறுகுடலை அடையும்போது, அவை ரத்தத்தில் கலந்து குடல்வாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதன் விளைவால் குடல்வாலில் அழற்சி உண்டாகிறது. இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். மேலும் அந்த பகுதியை மென்மையாக அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரித்தல், இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படுதல் ஆகியன அப்பென்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும். கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படுமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவம் செய்யாமல் இருந்தால் நோய்த்தொற்று பரவி, வயிற்றுப்பை அழற்சியை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அப்பென்டிசைட்டிஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும், சுகாதாரமான உணவை சாப்பிடுவதன் மூலமும் அப்பென்டிசைட்டிஸ் வராமல் தடுத்துவிடலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker