பத்தே பல்லு பூண்டு இருந்தா போதும்… நாக்கிற்கு ருசியான செட்டிநாடு பூண்டு குழம்பு செய்யலாம்
அன்றாட சமையலில் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் மதிய உணவுக்குப் பிரதானமாக இருக்கும்.
ஆனால், ஒரே மாதிரியான ரசம், குழம்பு, சாம்பார் செய்வது சமைப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் நாளடைவில் ஒரே மாதிரியான சுவையால் சற்று சலிப்பு ஏற்படுத்தலாம்.
இதற்காகவே நாம் நமக்கு பிடித்த முறையில் பூண்டை வைத்து செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையானப்பொருட்கள்
- சின்ன வெங்காயம் -15
- பூண்டுப்பல் – 10
- தக்காளி – 1
- புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க
-
- காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
- தனியா – 1 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – கால் டீஸ்பூன்
- கச கசா – 1 டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறு துண்டு
தாளிக்க
- நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். தக்காளியை நறுக்கவும்.
வறுக்க வேண்டிய மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாக சிவக்கும் வரை வறுத்து, ஆறியதும் பொடியாக அரைத்தெடுக்கவும். கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா விழுதும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், புளித்தண்ணீரைச் சேர்த்து நன்றாக கிளறவும். குழம்பு கொதித்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்