ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் கறிவேப்பிலை சட்னி… இப்படி செய்து பாருங்க
இந்திய சமையலில் கறிவேப்பிலை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து விடுகின்றது. ஆனால் குழம்புகளில் போடும் கறிவேப்பிலையை பெரும்பாலானவர்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள்.
கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் காணப்படுபகின்றது. எனவே குழம்பில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.
கறிவேப்பிலையின் சத்துக்களில் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் உள்ளன. கறிவேப்பிலை பார்வையை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
அவை கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும், எலும்பு ஆரோக்கியம், இரத்த ஓட்டம் மற்றும் பலவற்றிற்கு அவசியம்.
கூடுதலாக, கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும்,கறிவேப்பிலையை கொண்டு எவ்வாறு நாவூரும் சுவையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 8
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத் தூள் – 1/2 தே.கரண்டி
பூண்டு – 4- பல்
சின்ன வெங்காயம் – 15
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சின்ன மூடி தேங்காய் – 1 மூடி
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் வரமிளகாய், புளி மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் வறுத்த பொருட்களை ஒரு தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்நிறமான வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி அதனுடன் துருவிய 1 மூடி தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வதக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து பெடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையையும் அதனுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரப்பான பதத்தில் அரைத்து அதனை ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடைசியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.