பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு… எப்படி செய்வது?
பொதுவாகவே ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து ஆறுதலாக சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.
அந்தவகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 1/4 கிலோ மசாலாவிற்கு
மல்லி – 2 1/2 மேசைக்கரண்டி
சோம்பு – 1 1/2 தே.கரண்டி
சீரகம் – 2 தே.கரண்டி
மிளகு – 3/4 தே.கரண்டி
வரமிளகாய் – 6-7
பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 5
அன்னாசிப்பூ – 2 இதழ்
கறிவேப்பிலை – 1 கொத்து
கசகசா – 1 தே.கரண்டி
எண்ணெய் – 1 1/2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 25
நல்லெண்ணெய் – 3 தே.கரண்டி
பிரியாணி இலை – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
கல்உப்பு – 2 தே.கரண்டி
தக்காளி – 2
சுடுதண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் – 1தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் சிக்கனை இரண்டு முறை நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நல்ல வாசனை வரும் வரையில் வறுக்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கசகசாவை சேர்த்து லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வருத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், பிரியாணி இலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் கழுவி வைத்துள்ள சிக்கனையும் அதல் சேர்த்து, அத்துடன் தேவையான அளவுக்கு கல் உப்பு சேர்த்து சிக்கனின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியையும் அதில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு அதனை நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின்னர் குழம்பிற்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக சிக்கனை வேக வைக்க வேண்டும்.
இறுதியாக மற்றொரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி கிளறினால் அவ்வளவு தான் பொள்ளாச்சி பாணியில் சுவையான சிக்கன் குழம்பு தயார்.