பிடிச்சிருந்தாலும், பசங்கக்கிட்ட இந்த 10 குவாலிட்டி இருந்தா, பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்களாம்!
எல்லா நட்பு வட்டாரத்திலும் ஒரு சிங்கிள் ஆண் அழகன் இருப்பான். ஊரே அவனுக்கு எல்லாம் ஆள் இருக்கும், எத்தனை லவ்வர் வெச்சிருக்கானோ என்று பேசிக் கொண்டிருக்கும் போது. அவன் மட்டும், இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு என்று புலம்பிக் கொண்டிருப்பார். இப்படியான நபர் உங்கள் கேங்கிலும் கூட இருக்கலாம். ஏன் இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களாகவே கூட இருக்கலாம்.
பாஸ்! நீங்க காலம், காலமா சிங்கிளா இருக்கீங்களா? அதுக்கு என்ன காரணம்ன்னு தெரியலையா? ஒருவேளை இந்த பத்து விஷயங்கள் கூட நீங்க சிங்கிளா இருக்க காரணமாக இருக்கலாம்.
ஆம்! இந்த பத்து விஷயங்கள் ஒரு ஆணிடம் இருந்தால், தங்களுக்கு பிடித்திருந்தாலுமே கூட அவருடன் உறவில் இணையவோ, அவர் மீது நம்பிக்கை வைப்பதோ சிரமம் என்கிறார்கள் பெண்கள்…
அம்மா பிள்ளை!
எதற்கு எடுத்தாலும் வீட்டில் கேட்டு சொல்கிறேன், அம்மா பர்மிஷன் கொடுத்தால் தான் செய்வேன் என சுயமாக முடிவு எடுக்க முடியாத ஆண்கள் மீது விருப்பம் இருந்தாலுமே கூட, அவர்களை காதலிப்பதோ, அவர்களுடன் திருமண உறவில் இணைவதோ கொஞ்சம் யோசிக்க வைக்கும். அவர்களை நம்பி உறவில் இணைவது கடினம்.
பயம்!
கருப்போ, வெள்ளையோ, குண்டோ, ஒல்லியோ, உயரமோ, குட்டையோ… எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். சிக்ஸ் பேக் இல்லாவிட்டாலும் கூட, தன்னால் நாலைந்து பேரை அடிக்க முடியாது என்றாலும் கூட… பயம் இருக்க கூடாது. எதை கண்டும் அஞ்சக் கூடாது. ஓர் ஆணுக்கு அடையாளமே வீரம் தான். எதற்கு எடுத்தாலும் அச்சப்படும் ஆணை பிடித்திருந்தாலுமே கூட அவருடன் உறவில் இணைய தயக்கம் ஏற்படும்.
கஞ்சத்தனம்!
திருடனை கூட காதலித்துவிடலாம். ஆனால், கஞ்சனை காதலித்துவிட கூடாது. சிக்கனமாக இருப்பது வேறு, கஞ்சத்தனமாக இருப்பது வேறு. இந்த கஞ்ச புத்தி அவர்களை மட்டுமின்றி, அவர்களது துணை மற்றும் குழந்தைகளையும் பாதிக்கும். எனவே, ஓர் ஆணை பிடித்திருந்தாலுமே கூட, அவர் கஞ்சன் என்று தெரிந்தால், அவருடன் காதல் உறவில் இணைவது குறித்த எண்ணம் எழாது.
ஸ்டேடஸ்!
சில பெண்கள் தன் நிலைக்கு மேல் இல்லை எனிலும், தனக்கு நிகரான நபராக இருக்க வேண்டும். நான் என்ஜினியர் எனில், அவரும் அதற்கு ஈடான படிப்பை படித்திருக்க வேண்டும். நான் வாங்கும் அளவிற்கு சம்பளம் அவரும் வாங்க வேண்டும். இந்த ஸ்டேடஸ் நிலை சமநிலையாக இல்லை எனில் விருப்பம் இருந்தாலுமே கூட காதல் / திருமண உறவில் இணைய சற்று யோசிக்க வைக்கும்.
வர்க்!
கிட்டத்தட்ட ஸ்டேடஸ் போலயே தான், வெளியே சொல்லிக்கொள்ளும் படியான வேளையில் இருக்க வேண்டும். குறைந்த பட்ச தன்னை வைத்துக் காப்பாற்றும் அளவிற்கான ஊதியம் / வருமானம் இருக்க வேண்டும். இல்லையேல், எவ்வளவு பெரிய ஆண் அழகனாக இருந்தாலும் செட் ஆகாது.
சாதி, மதம்!
தங்களுக்கு ஓகே என்றாலும் கூட, வீட்டில் உள்ளவர்கள் வேறு சாதி, மதத்தினரை சேர்ந்தவரை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நமக்கே ஓகே என்றாலுமே கூட, சில இடங்களில் மணமகன் வீட்டு கலாச்சாரத்தை மட்டும் தான் திருமணத்திற்கு பிறகு கடைபிடிக்க வேண்டும் என்பார்கள். இது சமநிலையான சூழல் அல்ல. இருவரின் கலாச்சார, பழக்க வழக்கத்தையும் பின்பற்றுவது தானே சரி. சிலர் காதலிக்கும் போது இதை பார்க்கா விட்டாலும், திருமணம் என்று வரும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திவிடுவதுண்டு.
துறை!
சினிமா, இசை, விளையாட்டு என சில துறைகளில் நிறைய சம்பாதிக்கலாம் என்றாலும், அதில் செட்டில் ஆவது கடினம். சில சமயம் வாய்ப்பு தேடி, தேடி கடைசி வரை வாய்ப்பு கூட கிடைக்காமல் ஒரு கட்டத்தில் வாழ்வில் விரக்தியின் உச்சத்திற்கே செல்பவர்களும் இருக்கிறார்கள். இதுப் போன்ற துறைகளில் வேலை செய்ய முயற்சித்து கொண்டிருக்கும் ஆண்களை பிடித்திருந்தாலும் கூட, அதை காதல், திருமணத்திற்கு எடுத்து செல்ல சற்று தயக்கம் இருக்கும்.
நட்பு வட்டாரம்!
கண்டதும் காதல் / விருப்பம் வந்துவிடும். ஆனால், அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களது நட்பு வட்டாரத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும். ஆண்கள், காதலியிடம் உண்மையாக இருப்பதை காட்டிலும், நண்பர்களிடம் தான் உண்மையாக இருப்பார்கள். ஒருவேளை அந்த நட்பு வட்டாரம் மோசமானதாக இருந்தால், அதை வைத்து விரும்பினாலும் கூட அந்த ஆணுடன் உறவில் இணைய தயக்கம் ஏற்படும்.
மரியாதை!
இங்கே கெட்ட வார்த்தை பேசாத ஆண்களின் எண்ணக்கை மிகவும் குறைவு. என்னமோ பேசிட்டு போகட்டும். ஆனால், தங்களுக்கு மதிப்பு மரியாதை அளிக்க வேண்டும். பெண்கள் என்றாலே மோசம், அடிடா அவள, உதடா அவள என்று பெண்களை வசைப்பாடும் ஆண்கள், பெண்கள் என்றாலே முட்டாள்கள் என்று கருதும் ஆண்கள் மீது விருப்பம் வந்தாலுமே கூட, அதை காதல் வரை கொண்டு செல்வது கடினம்.
ஃபேஷன்!
ஸ்டைலாக, ஃபேஷனாக இருக்கும் ஆண்கள் மீது எவ்வளவு ஈர்ப்பு உண்டாகிறதோ, அதே அளவு அவர்கள் நம்மை ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் ஏற்படும். இவர்கள் ஒருபுறம் என்றால், சில ஹாப் பாயில் கேஸ்களும் இருக்கின்றன. ஃபேஷன் என்ற பெயரில் கோமாளித்தனம் செய்துக் கொண்டிருப்பர்கள். இவர்கள் மீது ஈர்ப்பு உண்டானாலுமே கூட காதல் / திருமணம் எனும் போது கொஞ்சம் தயக்கம் உண்டாகும்.