மீன் குழம்பை மிஞ்சும் சுவையில் கோவக்காய் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளுள் கோவக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காய் இலைகள் பயன்படுத்தப்படுகின்றது.
கோவக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோய்க்கு தீர்வு கொடுப்பதுடன் உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் இரு துணைப்புரிகின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்கள் மற்றும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு கோவக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூற வேண்டும்.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த கோவக்காயை வைத்து மீன் குழம்பே தோற்றுப்போகும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
கோவைக்காய் – 1/4 கிலோ (நீளவாக்கில் வெட்டியது)
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்)
பச்சை மிளகாய் – 2-4
சின்ன வெங்காயம் – 6 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – 1/4 கப்
மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
மல்லித் தூள் – 1 1/2 தே.கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 2 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து விரும்பிய வடிவில் நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீ்ர் ஊற்றி புளியை ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள கோவைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குறைந்த தீயில் நன்றாக வேகவிட வேண்டும்.
கோவக்காய் வேகும் இடைவெளியில் ஒரு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை,கோவைக்காயுடன் சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு புளிசாற்றினையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் வேகவிம வேண்டும்.
கடைசியில் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து தாளித்து அதனை கோவைக்காய் குழம்புடன் சேர்த்து கிளறினால், அட்டகாசமான சுவையில் கோவைக்காய் குழம்பு தயார்.