ஆரோக்கியம்

கோடை காலத்தை ஆரோக்கியமானதாக்கும் வாழ்க்கை முறை

கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை.

ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் வரும் வெயில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி, கம்பு, கூழ் வகைகளை அருந்தலாம்.காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது. இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூசாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.

கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் தண்ணீரில் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடிக்கலாம்.

கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்..ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.மேற்சொன்ன டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த கோடை காலத்தை குளிர்ச்சியாக மாற்றி சமாளிக்கலாம் .

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker