தாங்க முடியாத வலியை தரும் பல் சொத்தை! வாழ்நாள் முழுக்க அது ஏற்படாமல் தடுப்பது எப்படி?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் பிரச்சினையாக பல் சொத்தை உள்ளது.
பல் சொத்தை ஏற்பட்டால் அந்த இடத்தில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.
பல் சொத்தை வராமல் தடுப்பது எப்படி?
காலை, இரவு என 2 வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களை கீழ்நோக்கி சுழற்றியும், கீழ் தாடை பற்களை மேல் நோக்கி சுழற்றியும் துலக்க வேண்டும்.
கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். புளூரைடு கலந்த அனைத்து வகை பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ‘டிசென்சடைசிங்‘ பற்பசையை பயன்படுத்தலாம்.
5 வயது வரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும்.
தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
வைட்டமின் – சி, வைட்டமின் – டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிக குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
இதோடு 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.