குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை மிருதுவாக வைப்பதற்கு உதவும் இயற்கை பொருட்கள் என்னென்ன?
வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக இதனை குளிர்காலத்தில் கவனிக்கத் தவறி விட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும்.
சருமத்தில் ஈரப்பதம் இல்லாததால் சருமத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (லிப்பிடுகள்) குறைகின்றன. இவைதான் ஈரப்பதத்துடன் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது. ஒருவருக்கு வறண்ட சருமம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தினசரி குளியல் பழக்கம் முதல் குளிர்கால வானிலை வரை, உங்கள் சருமம் அனைத்தையும் எதிர்கொள்ளும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், வறண்ட சருமத்தை குணப்படுத்த நீங்கள் ஒரு தோல் மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை. உங்கள் உலர்ந்த திட்டுக்களை சிரமமின்றி குணப்படுத்தக்கூடிய இயற்கை வீட்டு வைத்தியங்களை நீங்கள் வீட்டிலே செய்யலாம்.
அவோகேடோ மாஸ்க் :
அவோகேடோ பழத்தை அரைத்து, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும். உங்களுக்கு மோசமான வறண்ட சருமம் இருந்தால் 1 டீஸ்பூன் தேனையும் அதனுடன் சேர்க்கலாம். இந்த மாஸ்க்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் உலர விடவும். உங்கள் தோல் இப்போது ஈரப்பதத்துடன் இருக்கும். அவோகேடோ பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக வயதான தோற்றத்தை நீக்கி, சரும வறட்சியை தடுக்கிறது. அவோகேடோ பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், வறண்ட சருமம், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆலிவ் எண்ணெய் :சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் வறண்ட சருமத்தில் பயன்படுத்த சிறந்த இயற்கை எண்ணெய். இது இயற்கை சுத்தப்படுத்தியாகவும், மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. உங்கள் சருமத்தில் சிறிது ஆலிவ் எண்ணெயை தேய்த்து உலர விட்டு கழுவ வேண்டும். ஆலிவ் எண்ணெய் நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க பேருதவியாக இருக்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெய்யை கட்டாயம் அனைவரும் வைத்து கொள்வது நல்லது. அழகுப் பராமரிப்பு விஷயத்தில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க் :
உங்கள் வறண்ட சருமத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கு ஒரு கப் ஓட்ஸை சூடான குளியல் நீரில் சேர்க்கவும். ஓட்ஸ் உங்கள் தோல் ஈரப்பதத்தை மீண்டும் பெற உதவுகிறது. ஓட்ஸ் ஒரு சிறந்த எக்ஸ்போலியேட்டரை உருவாக்குகிறது. மேலும் 2 தேக்கரண்டி ஓட்ஸில் 1 தேக்கரண்டி தேனை தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கலவையை வெதுவெதுப்பாக்கி, உங்கள் தோலில் அதை அப்பிளே செய்யவும். பின்னர் 30 நிமிடங்களுக்கு பின்னர் மாஸ்க்கை அகற்றி நீரில் முகத்தை கழுவிவிடலாம். இது உண்மையில் சிறந்த பலனை உங்களுக்கு அளிக்கிறது.
அவோகேடோ ஸ்கரப் மற்றும் பப்பாளி பேக் :
பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பளிச் என்று வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை அவோகேடோ பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு அவோகேடோ பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பப்பாளி பேக் என்பது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் பப்பாளி பழத்தை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேனை கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வறண்ட சருமத்தை குணமாக்க உதவும் டிப்ஸ்கள் :
* உங்களுக்கு வறண்ட சருமம் என்றால், நீங்கள் வாழைப்பழ பேஷியலை பயன்படுத்தலாம். ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
* 2 முட்டைகளை எடுத்து அதில் மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை நன்றாக அடித்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
* எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதுவும் வறண்ட சருமத்தை குணமாக்குவதை நாம் உணரலாம்.
-* சூரிய கதிர் பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம். முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
மேற்சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வறண்ட சருமத்தை சரி செய்து முகத்தை பளிச்சென்று பொலிவுற வைத்துக்கொள்வது அவசியம். அழகு என்பதை தவிர ஆரோக்கியம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. வருடத்தில் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் இது நல்ல பலனை அளித்திடும்.