பணியிடத்தில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்வது..?
பணியிடத்தில் உண்டாகும் எதிர்மறை விஷயங்கள் அலுவலக வேலைத்திறன் குறைவதற்கான முக்கிய காரணமாக இருக்கும். இதனால் ஊழியர்களுக்கும் பணியின் மீதான ஈர்ப்பு குறையலாம். அப்படிப்பட்ட சூழலை சமாளிக்காமல் அல்லது சரி செய்யாமல் இருப்பது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இது பணியாளர்களின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே அதை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.
பொறுப்புகளை அதிகம் கொடுங்கள் : எந்த ஒரு ஊழியரும் தன்னை பணியிடத்தில் நிரூபிக்கவும், வாய்ப்புகளுக்காகவுமே காத்துக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களுக்கான பொறுப்பு அதிகரிக்கும் வகையில் , அதை நிரூபிக்கும் வாய்ப்பாக அவர்களுக்கான வேலையை கொடுங்கள். இதனால் ஊழியர்கள் கடினமாக உழைப்பார்கள். வேலையும் சிறப்பாக நடக்கும்.
சமமாக நடத்துங்கள் : ஒருவருக்கு சாதமாகவும், ஒருவருக்கு எதிராகவும் நடந்துகொள்வது பணிச்சூழலை கெடுக்கும். எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு, வேலை பளு, பொறுப்புகளை வழங்குங்கள். கம்பெனியின் விதிமுறைகளுக்கு உண்மையாக இருந்தாலே போதுமானது.
கருத்துக்களுக்கு வரவேற்பு : ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நிராகரிக்கிறீர்கள் எனில் அது அவர்களை நீங்கள் தாழ்வாக நடத்துவதாக எண்ணம் தோன்றும். இதனால் எதிர்மறை விஷயங்கள் ஊழியர்களுக்குள் வரத்துவங்கும்.
இணைந்திருங்கள் : பணி ரீதியாக அனைவரிடமும் நெருங்கிப் பழகுங்கள். அவர்களுடன் உரையாடல், விவாதம் போன்றவற்றை நிகழ்த்துங்கள். அலுவலகத்தில் நடக்கும் எதார்த்தங்களை பேசி தெரிந்துகொள்ளுங்கள். பாஸ் போன்ற தோற்றத்தில் வருவதும், போவதும், ஆர்டர் கொடுப்பதுமாக இருந்தால் உங்களுக்கும் ஊழியர்களுக்குமான உறவு இருக்காது.
பாராட்டு : கொடுத்த வேலை சிறப்பாக செய்கிறார், குறித்த நேரத்தில் செய்கிறார் எனில் அவரை பாராட்டுங்கள். மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட ஊக்கம் கொடுங்கள். இதனால் அலுவலகத்தில் பாசிடிவிடி மலரும்.
நம்பிக்கை : ஒருவர் மீது நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை சம்மந்தப்பட்டவருக்கு உணர்த்தினால் போதும். அந்த நம்பிக்கையை காப்பற்றவாவது உழைப்பார்கள். அதே ஃபார்முலாதான் பணியிடத்திலும்…ஊழியர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்கள். நிறுவனத்திற்கு எதிராக திசை திரும்ப மாட்டார்கள். அது பணிச்சூழலையும் மாற்றும்.