குழந்தைகளின் நேரத்தை ஜாலியாகக் கழிக்க உதவும் ‘ஆப்ஸ்’
குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.
யூ-டியூப் கிட்ஸ் (youtube Kids):
யூ-டியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக யூ-டியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்கலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.
நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் (Nasa Visualization Explorer):
நாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்ளை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கான் அகாடமி கிட்ஸ் (Khan Academy Kid):
பிரபலமான கற்றல் செயலியான ‘கான் அகாடமி’யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம்பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.
டைனி கார்ட்ஸ்(Tiny Cards):
புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் (Duo lingo) குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹவ் டு மேக் ஓரிகாமி (How to make Origami):
பேப்பரில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். பேப்பரில் செய்யும் இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இந்தக் கலையின் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை நாமே பேப்பரில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்த செயலி, ‘ஹவ் டு மேக் ஓரிகாமி’.