இடுப்பு எலும்பு முறிவுக்குப் பிறகும் நன்றாக நடக்கலாம்: ஆய்வு கூறுவது என்ன?
வைட்டமின் டி குறைபாடுகள் இல்லாதோருக்கு இடுப்பு எலும்பு முறிவுக்குப் பிறகு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு கூறுகிறது.
தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், வைட்டமின் டி குறைபாடு இல்லாத முதியோர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதனின் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி அடங்கிய சில உணவுகள், சூரிய சக்தி, வைட்டமின் மாத்திரைகள் மூலம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது.
கடுமையான வைட்டமின் டி குறைபாடு தசை, அறிவாற்றல் மற்றும் சில உறுப்பு அமைப்புகளில் நேரடியாக தொடர்பு கொண்டது. இந்நிலையில் வயதானவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட பின்னர் அவர்கள் நடப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. பலர் வாழ்க்கையின் இறுதி வரை நடக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 65 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 3,00,000 பேர் இடுப்பு எலும்பு முறிவுகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வகை எலும்பு முறிவுகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக நடக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
ஆனால், வைட்டமின் டி, இடுப்பு எலும்பு முறிவை சரிசெய்ய உதவுகிறது என்பது ஒரு சில ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைட்டமின் டி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்குப் பிறகு எலும்புகளை வலுவடையச் செய்து நடக்க வைக்க பயன்படுகிறது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த நூற்றுக்கணக்கானோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். வைட்டமின் டி குறைபாடு இல்லாதோருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக நடைப்பயிற்சி உள்ளிட்ட சில எளிமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் தொடர் பயிற்சியின் காரணமாக குறுகிய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அவர்களிடம் காணப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.