வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் சில்லி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளியமுறையில் ஹோட்டல் ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சில்லி நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
- நூடுல்ஸ் – 1 பாக்கெட்
- கோஸ் – 1/2 கப்
- கேரட் – 2
- குடை மிளகாய் – 1/2 கப் சிவப்பு
- குடை மிளகாய் – 1/2 கப் பச்சை
- வெங்காயம் – 1
- ஸ்ப்ரிங் ஆனியன் – ஒரு கையளவு
- சோயா சாஸ் – 2 மேஜைக்கரண்டி
- வினிகர் – 2 மேஜைக்கரண்டி
- கிரீன் சில்லிசாஸ் – 1 மேஜைக்கரண்டி
- ரெட் சில்லி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
- பூண்டு – 2 பல்
- பச்சை மிளகாய் – 2
- மிளகு தூள் – 1 மேஜைக்கரண்டி
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சில்லி நூடுல்ஸ்
செய்முறை.:
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
நூடுல்ஸ் 80 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை நன்கு கலக்குமாறு பிரட்டி போடவும்.
நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார்.