திருமண தொகுப்பில் இடம் பிடித்த முககவசம்: காலத்துக்கு ஏற்ப மாறிய திருமண ஏற்பாட்டாளர்கள்
காலத்துக்கு ஏற்ப திருமண ஏற்பாட்டாளர்கள் மாறி வருகிறார்கள். பன்னீரை பின்னுக்கு தள்ளி திருமண தொகுப்பில் கிருமிநாசினி, முககவசம் இடம் பிடித்துள்ளது.
திருமண தொகுப்பில் இடம் பிடித்த முககவசம்
பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். இவ்வாறு சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படும் திருமணங்களை கூட பூமியில் நாம் இப்போது நிம்மதியாக நடத்தமுடிவதில்லை. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் பல திருமணங்கள் உற்றார், உறவினர்கள் இன்றி வெறும் சம்பிரதாயங்கள் போலவே நடக்கிறது. மனம் அறிந்து நடத்துவதற்காக நிச்சயம் செய்த திருமணம், இப்போது மவுனம் காத்து நிற்கிறது.
உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்து மழையில் நனைப்பது தற்பேதைய சூழலில் அரிதாகிவிட்டது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை சார்ந்து இருக்கும் பந்தல், மணமக்கள் அலங்காரம், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு கொடுப்பவர்கள், சமையல்கலை நிபுணர்கள், புகைப்பட கலைஞர்கள், வரவேற்பாளர்கள், மந்திரம் ஓதுபவர்கள், நாதசுர கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சவாலான சூழலிலும் வாழ்க்கையை ஓட்டுவதற்காக மாற்று வழியை தேடவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதுபோலத்தான் திருமண ஏற்பாட்டாளர்களும் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக 50 பேர்களை மட்டுமே அழைத்து திருமணம் நடத்தவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அதற்கேற்ப, திருமண ஏற்பாட்டாளர்கள் திருமணத்துக்கான தொகுப்பினை வடிவமைத்து வருகிறார்கள். இந்த தொகுப்புக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருமண தொகுப்பில் இணையதள அழைப்பு அட்டை, மணமகள் அலங்காரம், மெஹந்தி (மருதாணி) அலங்காரம், கார்களில் அலங்காரம், திருமண மண்டபம் மற்றும் அதன் முகப்பு அலங்காரம், செண்டை மேளம், 50 நபர்களுக்கு அசைவ மற்றும் சைவ உணவு, 2 மைக்குகள் உடன் ஒலி பெருக்கி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், 50 அட்டைகளை கொண்ட புகைப்பட ஆல்பம், விருந்தினர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தல், கைகளில் எடுத்துச்செல்லும் கிருமிநாசினி பாட்டில் (50 மி.லி.), என்.95 ரக முககவசங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
திருமணங்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு வரவேற்பு பரிசாக இப்போது கையடக்க கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. தாங்கள் விரும்பும்போது எல்லாம் ககைளை சுத்தம் செய்துக்கொள்ளலாம். அழையா விருந்தாளியான கொரோனா வைரஸ் வருகைக்கு முன்பாக நடைபெற்ற திருமணங்களில் பன்னீர் தெளித்து விருந்தினர்களை மனம் குளிர வரவேற்பார்கள். அழைக்காத விருந்தினர்களும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள்.
திருமண வீடுகளில் சந்தனமும், பன்னீரும் மனம் பரப்புவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக தற்போது நடைபெறும் உறவுகள் சுருங்கிய சிக்கன திருமணங்களில் பன்னீர் கானல் நீராகிவிட்டது. பன்னீரின் இடத்தை கிருமிநாசினி தட்டிப்பறித்துவிட்டது. திருமண வைபவங்களுக்கு ஒவ்வொருவராக சென்று பார்த்து ஏற்பாடு செய்வதை காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய திருமண தொகுப்பிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கொரோனா என்ற கொடிய அரக்கன் நம்மை விட்டு ஒழிந்தால் தான், திருமண வீடுகளில் மீண்டும் பன்னீர் தன்னுடைய வாசத்தை பரப்பும்.