எடிட்டர் சாய்ஸ்புதியவை

நல்ல நட்பை அறிந்து கொள்வது எப்படி?

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து  அகநக நட்பது நட்பு”

என்பது வள்ளுவரின் நட்பு இலக்கணம் ஆகும். நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நாம் நண்பர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே…

நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. கஷ்டம் வந்தபோது கைகொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றி தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதைவிட, கையிலிருக்கும் மொபைல்போன் அல்லது கணினி முன்னோடியே தங்கள் காலத்தை கழித்துவிடுகிறார்கள்.

நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சலுகைகள் எப்படி இருக்கிறது? என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும். ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும். இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்து பாருங்கள்.

தாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

நட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்து கொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப்போல நண்பர்களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குவான். புகை பிடித்தல், போதை பொருள், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட தீயநடத்தைகளைக் கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க, பெற்றோரும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டுக் கொடுக்கும் போதும், மனதை திறந்து உள்ளத்தை சொல்ல முற்படும்போதும், மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். எல்லோரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா? என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புறவுடன் வளர்வோம்.. உயர்வோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker