காய்ச்சாத பாலை பயன்படுத்தினால்… இப்படி ஆகுமா சருமம்
பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் காப்பாற்றும். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.
இளவயதில் முதுமை தோற்றம் பிரச்சனை இருபாலருக்கும் உண்டு. இதற்கு காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிக ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும். சருமத்தில் இருக்கும் கொலாஜன் என்னும் உற்பத்தியை சீராக வைத்திருந்தால் சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும்.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படுகிறது. சருமம் நெகிழாமல் இறுக்கமாக வைக்க உதவுகிறது. எப்படி பயன்படுத்துவது என்று கேட்கிறீர்களா? முகத்துக்கு பயன்படுத்தும் பேஸ் பேக் அனைத்திலும் பாலை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.
வெயிலினால், பருக்கள் அதிகமாகி புண் ஆகும் போது, சிவப்பு தடிப்புகள், வீக்கம் போன்றவை உண்டாகும் போதெல்லாம் முகத்தில் தாங்க முடியாத எரிச்சல் வரக்கூடும். அப்போதெல்லாம் பாலை அள்ளி முகத்தை கழுவியோ அல்லது பஞ்சில் பாலை நன்றாக முக்கி அதை முகத்தில் ஒற்றி ஒற்றியோ எடுத்தால் முகத்தில் எரிச்சல் குறையும். எரிச்சலும். வலியும், குறையும். தீவிரமான புண்களின் தாக்கம் குறையும்.
கோடையில் வெயிலிலிருந்து வரும் போது எரியும் சருமத்தை குளிர்ச்சியாக்க பாலைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். எரிச்சல் உடனடியாக தணியும்.. சிவப்பு தடிப்பும் மாறும்.
வீட்டிலேயே பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது நீங்கள் கூடுதல் அழகை பெற பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று பாலை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் மூன்று மடங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் கால்களை நனைக்கவும். பிறகு மிதமான பிரஷ் கொண்டு உள்ளங்கால், கால்களின் மேற்புறம் கழுவி உலர வைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும். கைவிரல் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறையும். மாவு படிந்தாற் போன்று இருக்கும் கால்கள் அழகிய வனப்பை பெறும்.