ஊரடங்கு படுத்தும்பாடு: சலூன்கள் திறக்காததால் திண்டாட்டத்தில் ஆண்கள்
தன்னை அழகுபடுத்தி பார்ப்பதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் அல்ல. முடிந்தவரை முடிவெட்டுதல், முக சவரம் செய்து அழகாக இருக்கவே ஆண்கள் விரும்புவார்கள். கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தும் கூட, 34 வகையான கடைகளை திறக்க அனுமதித்தும் கூட சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்க அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஆண்கள் பலர் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள்.
சுயமாக முக சவரம் செய்து கொள்ள முடியுமானாலும், சிலர் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சலூன் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் ஆண்கள் அழகுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நீண்ட முடியுடன் மிரட்டல்
ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் தலை நிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து திரிந்து வருகிறார்கள். நரை முடியை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர் போல் பாவனை செய்து வந்தவர்கள் பலர் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தாடி, தலை முடியுடன் இருப்பவர்களை போல் பலரை காண முடிகிறது. விதவிதமாக முடிவெட்டுவதையே நாகரீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் நீண்ட முடியுடன் மிரட்டி வருகிறார்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் சிறுவர்களுக்கு முடி வெட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வீடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டு அழகு கலை நிபுணர்களாக மாறி வருகிறார்கள்.
தற்போது அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தலையில் அதிக முடி உள்ளவர்கள் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சளி தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் இதனை கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ? என்று தேவையற்ற மனக்குழப்பத்தையும் சந்தித்து இருக்கிறார்கள்.
மனக்கவலை
பெண்கள் தங்களது முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்வதிலும், டை அடிப்பதிலும், கலரிங் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம். அவ்வப்போது அழகு நிலையத்துக்கு சென்று அழகை மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த மனக்கவலை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
தலைக்கு மேல் வேலை இருப்பதாக கூறி அல்லாடுவார்கள். ஆனால் இங்கு தலைக்கு மேல் (முடிவெட்டும்) உள்ள வேலையை செய்ய முடியாமல் ஆண்கள் தவிப்பதை என்னவென்று சொல்வது.