உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்து
குழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா? என ஏங்குகிறார்கள்.
பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. இப்படி பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் உடல் ஒல்லியாக உள்ளதே என்று கவலைப்பட அவசியமே இல்லை.
சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள் தான் நம்மிடம் அதிகம். வறுமையோடு போராடும் ஏழைகளுக்கு தினமும் பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்ற சத்துள்ள உணவுகள் கிடைப்பது அரிது. இதனால், சத்து குறைவு நோய்கள் இவர்களை எளிதில் ஆக்கிரமித்துக் கொள்ளும். இது போன்ற பிரச்சினை காரணமாகவும் சிலர் ஒல்லியாக இருப்பார்கள்.
எந்த நேரமும் சாக்லெட், மிட்டாய், பிஸ்கட், சூயிங்கம், அரிசி என்று எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள். பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களை தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்கு தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவுகளை சாப்பிடுவது குறைந்துவிடும். இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல் மெலிவுக்குக் காரணமாகிவிடும்.
நன்றாக உடல் வளர்ச்சியோடு இருக்கும் ஒருவர் திடீரென்று மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்தான் காரணமாக இருக்கமுடியும். குறிப்பாக காச நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சவலை நோய், சிறுநீரக நோய், மன நோய், குடல் புழுக்கள், அஜீரணம் என்று பெரிய பட்டியலே போடலாம். ஒல்லியாக உள்ளவர்கள் முதலில் அதற்கான சரியான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சராசரி உடல் வாகை பெறமுடியும். உடல் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டுமானால், சரியான கலோரி அளவுள்ள உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். இதற்கு ஓர் உணவியல் நிபுணரிடம் ஆலோசித்து உங்களுக்கு தேவையான கலோரியை கணக்கிடுங்கள். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 2,200 கலோரியும், பெண்ணுக்கு 1,800 கலோரியும் தேவை. ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியை தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்துதான் மிகவும் உதவுகிறது. உடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச்சத்து அத்தியாவசியம். தசைகள் வலுவடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும் புரத உணவு மிக அவசியம். உடலில் ஏற்படும் காயங்களும் புண்களும் விரைவில் குணமாவதற்கு புரதம் இருந்தால்தான் முடியும். உடலில் ஹார்மோன்கள், என்சைம்கள், செரிமான நீர்கள் போன்றவை சீராகச் சுரப்பதற்கும் புரதம் தேவை. வயது, வேலையின் தன்மை, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு நாளொன்றுக்கு 50-லிருந்து 75 கிராம்வரை புரதம் தேவைப்படும்.