செல்கள் உதிர்ந்து அழகாகும் சருமம்
கைவிரல்களில் உள்ள சரும செல்கள் நிறைய பேருக்கு உதிர்ந்து கொண்டே இருக்கும். உடலில் மற்ற உறுப்புகளில் எப்போதாவதுதான் இந்த பிரச்சினை ஏற்படும். தோல் உரிதல் என்பது சரும வளர்சிதை மாற்றங்களில் முக்கிய அங்கமாகும். சீரான இடைவெளியில் சரும செல் அடுக்குகள், உதிர்ந்து புதிய செல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்க வழி ஏற்படும்.
இதுகுறித்து சரும நல நிபுணர் அஜய் ராணா கூறுகையில், ‘‘நமது சருமமே அதனை சுயமாக அழகுபடுத்திக் கொள்கிறது. சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும் எளிய வழிமுறையாக இது அமைந்திருக்கிறது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது. சருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சிலருக்கு வாரத்தில் இரண்டு முறைகூட சரும செல்கள் உதிரும். இந்த செயல்முறை இறந்த செல்களின் அடுக்குகளை நீக்க உதவும். அதோடு சருமம் கூடுதல் பொலிவும் பெறும்’’ என்கிறார்.
வறண்ட சருமம் கொண்டவர்கள், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு முயற்சி செய்யலாம். ஏற்கனவே அவர்களுடைய சருமம் வறண்டு இருப்பதால் அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டியதில்லை. சருமம் எண்ணெய் தன்மையுடனோ, முகப்பரு பாதிப்புடனோ இருந்தால், வாரத்திற்கு மூன்று முறை துடைத்தெடுக்கலாம்.
சரும எரிச்சல், சருமம் சிவப்பு நிறத்தில் காணப்படுதல், நமைச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சருமத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இறந்துபோன சரும செல்களை வெளியேற்றுவதற்கு சருமத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அது சருமத்தில் படிந்திருக்கும் தூசு, துகள்களை அகற்ற உதவும். முகத்தை கைகளை கொண்டு வட்ட வடிவத்தில் சில நிமிடங்கள் தேய்த்து கழுவி சுத்தப்படுத்தலாம். சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம்.