சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளான் கிரேவி… இப்படி ஒரு முறை செய்து பாருங்க
அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் சைவ உணவுகளின் பட்டியலில் நிச்சயம் காளான் முக்கிய இடம் பிடித்து விடுகின்றது.
காளான்கள் தனித்துவமான சுவையை கொண்டுள்ளது மட்டுமன்றி, பல்வேறு வைட்டமினகளையும் கொண்டுள்ளது.

ரிபோஃப்ளேவின் (B2), நியாசின் (B3), பாந்தோத்தேனிக் அமிலம் (B5) மற்றும் பயோட்டின் (B7) போன்ற முக்கிய வைட்டமின்கள் இதில் அடங்கும்.
இந்த வைட்டமின்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காளானை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் கிரேவி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 2 தே. கரண்டி
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
சோம்பு – 1 தே. கரண்டி
சின்ன வெங்காயம் – 15-20
தக்காளி – 1
உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி
சோம்பு – 1/2 தே.கரண்டி
பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 2
அன்னாசிப்பூ – 1
ஏலக்காய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1தே.கரண்டி
கரம் மசாலா – 1/2 தே.கரண்டி
காளான் – 300 கிராம்
பெரிய உருளைக்கிழங்கு – 1
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில், காளானை பெரிய துண்டுகளாக வெட்டி, சுடுநீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொரியவிட்டு, பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், பின்னர் ஒரு நிமிடம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில், நன்றாக வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறிவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதில் காளானை மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும், காய்கறிகளை கிளறி விட வேண்டும். அடுத்து கிரேவிக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறிவிட்டு, கொத்தமல்லியைத் தூவி குக்கரை மூடி, 1 விசில் விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காளான் கிரேவி தயார்.



