தாபா பாணியில் அசத்தல் சுவை பன்னீர் கிரேவி… இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாக சைவ உணவு உண்பவர்களின் நாளாந்த புரத தேவையை பூர்த்தி செய்வதற்கு பன்னீர் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பன்னீரை கொண்டு தாபா பாணியில் எவ்வாறு அசத்தல் சுவையில் கிரேவி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
¼ கப் தயிர்
¼ தே.கரண்டி மஞ்சள் தூள்
1 தே.கரண்டி மிளகாய் தூள்
¼ தே.கரண்டி கரம் மசாலா
¼ தே.கரண்டி சீரகப் பொடி
½தே.கரண்டி கசூரி மேத்தி
½ தே.கரண்டி உப்பு
2 தே.கரண்டி எண்ணெய்
1 பாக்கெட் நறுக்கிய பன்னீர்
கிரேவி செய்ய
2 மேசைக்கரண்டி எண்ணெய்
½ மேசைக்கரண்டி சீரகம்
1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
½ மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
½ மேசைக்கரண்டி சீரக தூள்
½ மேசைக்கரண்டி மல்லித்தூள்
2 தக்காளி, பொடியாக நறுக்கியது
1 குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
½ கப் தண்ணீர்
உப்பு தேவையான அளவு
2 மேசைக்கரண்டி கசூரி மேத்தி
½ மேசைக்கரண்டி கரம் மசாலா
2 மேசைக்கரண்டி கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் ¼ கப் தயிர், ¼ தே.கரண்டி மஞ்சள், 1 தே.கரண்டி மிளகாய் தூள், ¼ தே.கரண்டி கரம் மசாலா, ¼ தே.கரண்டி சீரகப் பொடி, ½ தே.கரண்டி கசூரி மேத்தி, ½தே.கரண்டி உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பன்னீரையும் அதில் சேர்த்து, மாரினேட் செய்து 30 நிமிடங்கள் வரையில் அப்படியே மூடிவைத்து ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தே.கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கி, ½தே.கரண்டி சீரகம் சேர்த்து பொரியவிட்டு, பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் 2 நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் நன்கு வதக்கிய பின்னர் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து, மொறுமொறுப்பாக மாறும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மேரினேட் செய்யப்பட்ட பன்னீரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பின்னர் ½ கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்கவிட வேண்டும்.
இதனை மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவைக்க வேண்டும்.இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மெதுவாக கலந்துவிட்டு இறக்கினால், சுவையான பன்னீர் கிரேவி தயார்.