முகப்பருக்களுக்கு முடிவுக்கட்டும் புதினா சட்னி…
புதினா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் இவை சருமத்தை அமைதிப்படுத்தவும்,மென்மையாக்கவும் உதவுகின்றன. இது தவிர, புதினா இலைகளில் அதிக அளவு சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளது இவை முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை விரைவில் போக்க உதவுகின்றது.
அப்பழுக்கு அற்ற முகப்பொலிவை கொடுக்கும் புதினாவில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 20 பல்
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய துண்டு
தேங்காய் – 1/4 கப்
புதினா – 1 கைப்பிடி
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மீதமுள்ள எண்ணெயில் பச்சை மிளகாயை நன்றாக வதக்கி, பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளி, தேங்காய் மற்றும் புதினா சேர்த்து, புதினா சுருண்டு வரும் வரையில் நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்த பருப்புக்களையும், வதக்கிய பொருட்களையும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பான பதத்தில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், அவ்வளவு தான் அருமையான சுவையில் முக அழகை பாதுக்காக்கும் புதினா சட்னி தயார்.