சப்பாத்திக்கு பக்காவான குடைமிளகாய் கிரேவி… பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது..
பொதுவாகவே காலையில் குழந்தைகளை பாடசாலைகக்கு அனுப்புவது கணவரை வேலைக்கு அனுப்புவது என வீட்டில் எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள்
இந்நிலையில் வீட்டில் உள்ள பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தால் சொல்லவே வேண்டாம் வீடே போர்களம் போல் காட்சியளிக்கும்.
அதில் காலையில் லேட்டா எழும்பினால் அவ்வளவு தான். காலை உணவுக்கு சாப்பாத்தி, இட்லி, தோசை என எதையாவது தயார் செய்து விடலாம் ஆனால் அதற்கு தொட்டுக்கொள்ள சைட்டிஸ் செய்வது தான் பெரும் குழப்பமாக இருக்கும்.
இப்படிப்பட்ட நேரங்களில் வெறும் பத்தே நிமிடத்தில் குடை மிளகாயை வைத்து அசத்தல் சுவையில் கிரேவி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
குடைமிளகாய் – 1 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
சீரகம் – 1/2 தே.கரண்டி
பிரியாணி இலை – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1தே.கரண்டி
மல்லி தூள – 1 தே.கரண்டி
கரம் மசாலா – 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
புளிப்பில்லாத தயிர் – 3 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சதுர துண்டுகளாக வெட்டப்பட்ட குடைமிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில், சீரகம், பிரியாணி இலையை போட்டு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் போட்டு மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரையில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தயிரை சேர்த்து கிளறினால், அத்துடன் கடலை மாவையும் சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை சேர்த்து கெட்டியாகி எண்ணெய் பிரியும் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு நறுக்கிய கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், அசத்தல் சுவையில் குடைமிளகாய் கிரேவி தயார்.