நாவூறும் சுவையில் தேங்காய் மசாலா மீன்குழம்பு
எப்போதும் உணவென்றால் சுவை நிறைந்ததாகவும் சத்துள்ளதாகவும் செய்ய வேண்டும். இதில் பல நாட்டு உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உணவுகளை நாம் வீட்டில் செய்து சாப்பிடும் போது ஆரோக்கியம் அதிகமாகும்.
அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் மீன் குழம்பு என்பது இருக்கும். வாரத்தில் மூன்று நாட்களாவது மீன் குழம்பு வைப்பது ஒரு பழக்கமாக இருந்து வருகின்றது. மீன் குழம்கு என சொன்னால் அதில் பல வகையில் செய்வார்கள்.
மீன் குழம்பு பொதுவாக மசாலா அரைத்து வைக்கப்படும். இது ஒவ்வொரு இடத்திற்கு தகுந்ததை போல வைப்பார்கள். அந்த வகையில் கேரளா சுவையில் தேங்காய் மசாலா மீன்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – அரை கப்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 1
மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் புளிக்கரைசலை தயாரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதன் பின்னர் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் என இவையனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் மண் சட்டியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்க்கவேண்டும்.
அது கொதி வந்த பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். இது இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்தால், மசாலாவின் பச்சை வாசம் போக தாமதமாகும். எனவே கொதி வந்ததும், தக்காளி மற்றும் மீன் துண்டுகளை சேர்க்கவேண்டும்.
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டால் நாவில் எச்சில் ஊறும் சுவையில் நாட்டு மீன் குழம்பு தயார்.