வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா.. ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்…
பொதுவாகவே மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே தோன்றும். கடைகளில் ஸ்நாக்ஸை வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியததுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் ஆரோக்கியமானதாக செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக வாழைக்காயில் பெரும்பாலானவர்கள் பஜ்ஜி தான் செய்வார்க்ள். வாழைக்காயை கொண்டு ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடும் வகையில் மொறு மொறுப்பான ஆரோக்கியம் நிறைந்த மிக்சர் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
உப்பு – 1/4 தே.கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
மிளகாய் தூள் – சிறிதளவு
செய்முறை
முதலில் வாழைக்காயை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, கேரட் துருவியின் உள்ள சற்று பெரிய துளையில் வாழைக்காயைத் துருவி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளியில் வைத்தால் வாழைக்காயின் நிறம் மாறிவிடும் என்பதால் உடனடியாக அதனை பொரித்து எடுத்துக்ககொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய வாழைக்காயைத் தூவி, நன்றாக பொரிய விட வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அந்த மஞ்சள், உப்பு கலந்த கலகையை பொரிந்து கொண்டிருக்கும் வாழைக்காயில் ஊற்றி கிளறிவிட்டுக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு சில்வர் சல்லடையை எடுத்து, அதில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது போல் வேர்க்கடலையையும் பொரித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கறிவேப்பிலை போட்டு பொரித்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தில் பொரித்த வாழைக்காயை எடுத்து, அத்துடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ஆகியவறற்றை சேர்த்து கிளறினால், சுகாதாரமான முறையில் தயார் செய்த சுவையான மற்றும் மொறுமொறுப்பான வாழைக்காய் மிக்சர் தயார்.