வீட்டில் காய்கறி இல்லையா… அப்பளம் வெச்சு அட்டகாசமான சுவையில் குழம்பு எப்படி செய்வது..
பொதுவாக வீட்டில் எல்லா நேரங்களிலும் காய்கறிகள் இருக்காது. இப்படி காய்கறி இல்லாத போது என்ன குழம்பு செய்யலாம் என சிந்திக்கீன்றீர்களா?
அப்பளம் இருந்தால் போதும் சூப்பரான குழம்பை நீங்கள் செய்யலாம். இந்த குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேண்டும் என கேட்கும் வகையில் சுவை அட்டகாசமாக இருக்கும். எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 10-12 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
பூண்டு – 10 பல் (நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மல்லித் தூள் – 3 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் – 1 தே.கரண்டி
மிளகுத் தூள் – 1 தே.கரண்டி
தண்ணீர் – 1 கப்
புளி – சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
தேங்காய் பால் – 1/2 கப்
வெல்லம் – 1/2 தே.கரண்டி
அப்பளம்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
முதலாவதாக அப்பளத்தைப் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் மிளகாய் தூள்,மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் மிதமான தீயில் வைதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு அதனுடன் புளிச்சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து, 5-6 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதனையடுத்து வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.
கடைசியாக அப்பளத்தை நொறுக்கி குழம்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் ஊற வைத்தால், அட்டகாசமான சுவையான அப்பள குழம்பு தயார்.