உங்க வீட்ல மைதா மாவு இருக்குதா.. அப்போ இந்த மொறு மொறு போண்டாவை கட்டாயம் செய்து பாருங்க
பொதுவாகவே, மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு.
குறிப்பாக, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அப்படி அவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா?
வீட்டில் மைதா மாவு இருந்தா போதும் அட்டகாசமான சுவையில் மொறு மொறு போண்டாவை எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/2 தே.கரண்டி
தயிர் – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சோடா உப்பு – 2 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றாக கிளறி விட்டுக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தயிர் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சிறிது சிறிதாக நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ள வேண்டும். போண்டாவுக்கு தயார் செய்யும் மாவு கெட்டியாகவோ அல்லது மிகவும் நீர்தன்மை கொண்டதாகவோ இருக்க கூடாது. நடுநிலையில் இருக்க வேண்டும்.அதனுடன் 2 சிட்டிகை சோடா உப்புயும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் போண்டாக்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை தேவையான அளவில் உருட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் மொறு மொறு போண்டா தயார்.
அதனை வீட்டிலேயே தயார் செய்து கொடுப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு எதுவித பாதக விளைவையும் ஏற்படுத்தாது.