தூங்கும்போது இந்த 5 தப்பு செஞ்சா உங்களுக்கு முகத்துல நிறைய பரு வருமாம்…
தூக்கம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. அதில் சரும ஆரோக்கியமும் அடக்கம். நம்முடைய உணவு முறைக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதை போல தூக்கத்திற்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு. அதனால் ஆரோக்கியமான பருக்கள் இல்லாத சருமம் வேண்டுமென்றால் கீழ்வரும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.
தலையணையை சுத்தமாக வைத்திருங்கள்
தலையணையை தினமும் மாற்றுவது மிக முக்கியம். பருக்கள் உருவாவதற்கு இந்த தலையணை கவர்களும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறதாம்.
தலையணையின் கவரில் நம்முடைய சருமத்திலிருந்து சுரக்கும் எண்ணெய், வியர்வை, பாக்டீரியாக்கள், சருமத்திலுள்ள இறந்த செல்கள் ஆகியவை படிந்திருக்கும். இவை நாள் கணக்கில் அப்படியே தங்கியிருக்கும்.
நாம் தலையணையின்மேல் முகத்தை வைத்து படுக்கும்போது சருமத்தின் உள் நுழைந்து சரும எரிச்சல், அரிப்பு மற்றும் பருக்களை உண்டாக்கும். அதனால் அடிக்கடி தலையணையை சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.
மேக்கப்புடன் தூங்கச் செல்வது
நிறைய பெண்கள் செய்யும் தவறு இதுதான். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் மேக்கப்பை ரிமூவ் செய்வது தான் நல்லது.
குறைந்தபட்சம் தூங்கச் செல்லும்முன் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது சருமம் சுவாசிக்க சிரமப்படும். அதோடு சருமத் துளைகளுக்குள் உங்ககளுடைய மேக்கப் பொருள்கள் உள்நுழைந்து அதன் வேலையை காட்ட ஆரம்பிக்கும். இதுவும் பருக்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காணரமாகும்.
தூக்க சுழற்சி முறை
போதிய நேரம் தூங்கும் எவ்வளவு முக்கியமோ அதேபோல சரியான நேரத்தில் தூங்குவதும் மிக அவசியம். தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லும் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.
இந்த சுழற்சி முறையில் மாற்றங்கள் ஏற்படும்போது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். இதுவும் முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.
போதிய தூக்கமின்மை
ஒரு நாளைக்கு சராசரியாக 7-9 மணி நேர தூக்கம் மிக அவசியம். இந்த தூக்கத்தின் அளவு குறையும்போது உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதோடு மன அழுத்தம், உடல் சோர்வு, கார்டிசோல் உற்பத்தி அதிகரித்தல் ஆகிய சிக்கல்களும் உண்டாகும்.
இவை எல்லாமே பருக்கள் உண்டாவதற்கும் சீபம் சுரப்பை அதிகரிப்பதற்கும் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதனால் போதிய அளவு தூக்கம் உங்களுடைய சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் உதவி செய்யும்.
பருக்களை தூண்டும் உணவுகள்
உணவுகளை எப்போதும் கவனமாகத் தேர்வு செய்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியம். தூங்கச் செல்வதற்கு முன்பு லேசாக ஸ்நாக்ஸ் கொரிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். அது சருமத்தில் பருக்களை உண்டாக்கக் காரணமாக இருக்கிறது.
குறிப்பாக படுக்கைக்குச் செல்லும்முன் காஃபைன் பானங்கள், ஸ்நாக்ஸ்கள் எடுத்துக் கொள்வதால் தூக்கம் பாதிக்கப்படும். இதனால் சீபம் சுரப்பு அதிகரிப்பதோடு பருக்கள் உண்டாகவும் காரணமாக இருக்கிறது.