சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே உணர்த்தக் கூடிய அறிகுறிகள்..!
நாம் உயிர் வாழ அவசியமான உறுப்புகள் என்று பட்டியலிடப்படும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரிப்பது இதன் பிரதான பணியாக இருக்கிறது. சிறுநீரகங்கள் செயல் இழக்கும் பட்சத்தில் உயிர் வாழ்வது நிச்சயமற்ற ஒன்றாக மாறிவிடும்.
சிறுநீரக பாதிப்பு திடீரென்று ஒரே நாள் இரவில் நிகழ்ந்து விடாது. நம் சிறுநீரகங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும்போது, உடல் பல்வேறு விதமான அறிகுறிகளை காட்டும். அதை நாம் உணர்ந்து தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என்ன? உடலில் வருகின்ற வேறு சில நோய்களின் விளைவாக சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். அதிகப்படியாக புகைப்பிடிப்பது, சிறுநீரக பாதிப்பு உடைய குடும்ப பின்னணியை கொண்டிருப்பது, சிறுநீரக அமைப்புகளில் மாற்றம் போன்றவையும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாக அமையும்.
சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள்… சிறுநீரகங்களில் லேசான பாதிப்பு ஏற்படும்போதே நம் உடல் அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்கிவிடும். ஆனால், இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், அவை இயல்பான உடல் உபாதைகள் என்று எண்ணி மக்கள் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். இதனால், ஒரு கட்டத்தில் சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலைக்கு வந்து விடுகின்றன.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது : உடனுக்குடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசர எண்ணம் ஏற்படுவது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். சிறுநீர் பாதையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் சுழற்சியும் மாறுபடும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஆபத்தான அறிகுறிதான். அத்துடன் சிறுநீர் கழிக்கும்போது வலி, சிறுநீர் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறுவது, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
வீக்கம் : நம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் பிரதான பணியாகும். இவை முறையாக செயல்படாத பட்சத்தில் கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும். உடல் திசுக்களில் அதிகப்படியான நீர் மற்றும் உப்பு சேர தொடங்கிவிடும். இதனால் பாதம், மூட்டு, கன்னம், கால்கள் போன்ற இடங்கள் வீக்கம் அடைய தொடங்கும்.
பசியிழப்பு மற்றும் மிகுதியான சோர்வு : காரணமே இல்லாமல் பசி உணர்வு குறையத் தொடங்குவது சிறுநீரக பாதிப்பின் அறிகுறி ஆகும். அதேபோல, சிறுநீரகங்கள் முறையாக செயல்படாவிட்டால் நம் உடல் எப்போதும் மிகுதியான அசதியுடன் காணப்படும். உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் இந்த சோர்வு ஏற்படும்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பு : ரத்த அழுத்த அளவுகள் திடீரென்று மிக அதிகரிப்பது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். அதேபோல சிறுநீர் கழிக்கும்போது கல் போன்ற கழிவுகள் வெளியேறும். மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் உணரும் பட்சத்தில் உடனடியாக சிறுநீரகவியல் துறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.