சுவையான & ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு பாயாசம் செய்வது எப்படி…
பாயாசத்தை நாம் பெரும்பாலும் பாசிப்பருப்பு அல்லது சேமியா வைத்து செய்திருப்போம். இந்த முறை, மிகவும் ஆரோக்கியமான மற்றும் தித்திப்பான பாயசம் ஒன்றை பச்சைப்பயறு வைத்து எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு – 1 கப் ( 250 மில்லி கப் ).
நெய் – 3 ஸ்பூன்.
திராட்சை – சிறிது.
முந்திரி பருப்பு – சிறிது.
தேங்காய் – 1 துண்டு நறுக்கியது.
பொடித்த வெல்லம் – 1 1/2 கப்.
பால் – 1 கப் காய்ச்சி ஆறவைத்தது.
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்.
கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப் ( விரும்பினால் ).
செய்முறை :
ஒரு பானில் பச்சைப்பயறு சேர்த்து வாசனை வரும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.
அடுத்து வறுத்த பச்சைப்பயறை குக்கரில் சேர்த்து, குறைந்த தீயில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்பு ஒரு பானில் நெய் சேர்த்து அதில் திராட்சை, முந்திரி, தேங்காய் துண்டுகளை தனி தனியே சேர்த்து வறுத்து வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைக்கவும்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில், வேகவைத்த பச்சைப்பயறு, கரைத்த வெல்லம், சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மூன்று நிமிடங்களுக்கு பிறகு கொதிக்க வைத்து ஆறிய பாலை சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை, வறுத்த தேங்காய், சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்.
பச்சைப்பயறு பாயாசத்தை சூடாக அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.