மஞ்சள் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையுமா..? தெரிஞ்சுக்கோங்க..!
தமிழர்களின் பாரம்பரியத்திலும், உணவுக் கலாச்சாரத்திலும் மஞ்சளுக்கு எத்தகைய சிறப்புமிக்க இடம் உண்டு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மங்களகரமான எதுவொன்றும் மஞ்சளை தொட்டு வைத்தே தொடங்குகிறது. அதேபோல, உணவில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கப்படாமல் எதுவும் சமைக்கப்படுவது இல்லை.
ஏனெனில் மஞ்சளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான மகத்துவமான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பது நம் பாரம்பரியமிக்க நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் மிகுந்த மஞ்சளானது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது மற்றும் கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இந்த நிலையில், கொலஸ்ட்ரால் என்றால் என்ன, இதற்கும் மஞ்சளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் :
நம் ரத்தத்தில் வேக்ஸ் போல கலந்திருக்கும் பொருள்தான் கொலஸ்ட்ரால் ஆகும். நம் உடலில் செல் மெம்ப்ரேன்களை உருவாக்கவும், அத்தியாவசிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், மிக முக்கியமாக விட்டமின் டி சத்தை உருவாக்கவும் மிக முக்கியமாகப் பயன்படுவது கொலஸ்ட்ரால் தான்.
எனினும், இந்த கொலஸ்ட்ரால் அளவு மிகுதியாக இருப்பின், உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இதயம் தொடர்புடைய நோய்கள் வருகின்றன.
இந்த நிலையில், கொலஸ்ட்ரால் அளவுகள் எல்லை மீறிச் செல்லாமல் தடுக்கக் கூடிய பல ஆயுர்வேத மூலிகைகள் நம் சமையல் அறையிலேயே இருக்கின்றன என்பதை நாம் அவ்வபோது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவை உதவிகரமாக உள்ளன.
மஞ்சளில் கிடைக்கும் மருத்துவ பலன்கள்
மஞ்சளில் குர்குமின் என்னும் சத்து மிகுதியாக உள்ளது. இதுதான் மஞ்சள் நிறத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல் அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கின்றன. ரத்த நாளங்களில் சேரக் கூடிய கொலஸ்ட்ராலை இவை கரைப்பதுடன், பல வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மஞ்சளை சரியான அளவில், சரியான வகையில் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு கீழ்காணும் நன்மைகள் கிடைக்கும்.
மஞ்சளில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன.
உடலில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்து அதிகரிக்கும்.
மூட்டு வலி மற்றும் உடல் பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
உடல் வலி இருப்பின், உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.
மூளையின் நரம்பியல் வளர்ச்சியை மஞ்சள் ஊக்குவிக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளன.
ஞாபக மறதி நோய்க்கு மஞ்சள் தீர்வளிக்கும்.
மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
உடலில் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக பின் விளைவுகளை எதிர்கொள்ளும் நபர்கள், அதற்கு தீர்வாக மஞ்சள் எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடியது. சூப், டீ, பால், ரசம், சாம்பார் என நாம் எடுத்துக் கொள்ளும் பல வகை உணவுகளில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.