அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
கோடை காலம் வந்துவிட்டாலே பலர் கோடையில் ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிட வேண்டுமென ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் சீசன் பாராமல் ஐஸ் கோன்கள் மற்றும் கிரீம்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடனேயே நாவில் சுவை தெரிவதற்கு முன்னாள் தெரிவது குளிர்ச்சியான உணர்வுதான். அதனாலேயே ஜில்லென ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஐஸ் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். அதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஐஸ்கிரீம் இனிப்பு, குளிர் மற்றும் புத்துணர்ச்சி, புரதம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அதைவிட ஐஸ்கிரீமில் கொழுப்பும் சர்க்கரையும் அதிகம். இதில் கலோரிகளும் அதிகம்.
அதிக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கலோரிகள் எரிக்கப்படாவிட்டால் நிச்சயம் எடை கூடும். மேலும் உடல் நலம் பாதிக்கப்படும் விரைவாக எடை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐஸ்க்ரீம் அதிகமாக உட்கொள்வதால் உடலில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகரித்து எடை கூடுகிறது. அரை கப் ஐஸ்கிரீமில் 7.2 கிராம் கொழுப்பு மற்றும் 137 கலோரிகள் உள்ளன. இதில் சுமார் 4.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.
பெரும்பாலான ஐஸ்கிரீம்களில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை வழக்கமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் நிறைவுற்ற கொழுப்பை அதிக அளவில் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
நிறைவுற்ற கொழுப்பை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இது தமனி அடைப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கிறது. எடையை குறைக்க வேண்டும் அல்லது கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து ஐஸ்கிரீம் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது சுகர் கிரேவிங்க்ஸை அதிகரிக்கிறது.
அதனால் ஐஸ்கிரீமுக்கு பதிலாக ஆரோக்கியமான தேர்வுகளை செய்யுங்கள். குறைந்த கொழுப்பு, சர்க்கரை இல்லாத உணவுகளை உண்ணுவது நல்லது.ஐஸ்கிரீமுக்கு பதிலாக என்ன சாப்பிடலாம் எனக் கேட்டால் குறைந்த கொழுப்புள்ள தயிர் நல்ல தேர்வாக அமையும்.