ஓவன் இல்லாமல், குக்கர் இல்லாமல்.. வீட்டிலேயே பனானா கேக் செய்ய முடியுமா..? இதோ ரெசிபி…
இந்த வாழைப்பழ கேக் செய்வதற்கு ஓவன் எதுவும் தேவையில்லை. குக்கர் கொண்டும் செய்யப் போவதில்லை. சாதாரண நான்ஸ்டிக் பேன் போதும். 15 நிமிடத்தில் சூப்பரான, டேஸ்டியான செலவே இல்லாத வாழைப்பழ கேக் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக நாம் செய்து கொடுத்து விடலாம். தேவையான பொருட்கள், அதை எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பனானா கேக் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பழம்-இரண்டு,
சர்க்கரை-கால் கப்,
காபி தூள்-ஒரு டீஸ்பூன்,
பூஸ்ட்-இரண்டு டேபிள் ஸ்பூன்,
கோதுமை மாவு-ஒரு கப்,
சமையல் சோடா-அரை ஸ்பூன்,
சமையல் எண்ணெய்-மூன்று டேபிள்ஸ்பூன்,
காய்ச்சிய பால்-அரை கப்,
நெய்-சிறிதளவு,
முந்திரி பருப்பு-பத்து,
உலர் திராட்சை-பத்து
பனானா கேக் செய்முறை விளக்கம்:
பனானா கேக் செய்வதற்கு முதலில் பெரிய வாழைப்பழம் இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கால் கப் அளவிற்கு முழுவதுமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரைக்கு பதிலாக பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம். ஆனால் வெல்லம் சேர்க்கும் பொழுது கூடுதலாக சேர்ப்பது நல்லது, இல்லை என்றால் இனிப்பாக இருக்காது.
பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இன்ஸ்டன்ட் காபித்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பூஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை சேர்த்துள்ளதால் இது நன்கு அரை பட்டுவிடும். தண்ணீர் எதுவும் கொஞ்சம் கூட சேர்த்து விடாதீர்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். சலித்து எடுத்த கோதுமை மாவுடன் அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். கேக் செய்வதற்கு கண்டிப்பாக சோடா உப்பு சேர்க்க வேண்டும் எனவே இதனைத் தவிர்த்து விட வேண்டாம்.
பிறகு இதனுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து விடுங்கள். உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். கடலை எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருக்கும். இவற்றை கலந்து விட்ட பிறகு நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். பிறகு ஒரு நான்ஸ்டிக் பேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உட்புறமாக சுற்றிலும் எல்லா இடங்களிலும் படும்படி நெய் கொஞ்சம் தடவிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சைகளை அதன் மீது தூவிக் கொள்ளுங்கள். வேறு ஏதாவது நட்ஸ் அல்லது கிஸ்மிஸ் பழம் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு தோசை கல்லை வையுங்கள். தோசை கல் சூடேறியதும் நீங்கள் இந்த பேனை வைக்க வேண்டும். பின்னர் ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். அதன் மீது வெயிட் வைக்க வேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேக விட்டால் பஞ்சு போன்ற சாஃப்ட்டான, சூப்பரான, டேஸ்டியான பனானா கேக் தயாராகி இருக்கும். இதை அப்படியே மெதுவாக எடுத்து ஒரு தட்டில் போட்டு கட் செய்து பரிமாற வேண்டியது தான்.