உறவுகள்சமையல் குறிப்புகள்

ஆம்லெட் பிரியர்களா நீங்கள்..? வெவ்வேறு வகையான ஆம்லெட்கள் இதோ உங்களுக்காக…

புரதம், மற்றும் கால்சியம் சத்து தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக முட்டை இருக்கிறது. ஆனால், இந்த எண்ணத்திலா நாம் முட்டையை எடுத்துக் கொள்கிறோம்! நிச்சயமாக கிடையாது. சுவையும், முட்டை மீதான மோகமும் தான் நாம் அதை தேடித் தேடி சாப்பிடுவதற்கு காரணம். முட்டை சாப்பிடுவதற்கு தனித்த நேரம் எதுவும் கிடையாது.

காலையில் அம்மா கையால் சுடப்படும் முட்டை தோசையானாலும் சரி, மதிய உணவுக்கு பரிமாறப்படும் முட்டை மாஸ், முட்டை பொரியல், ஆம்லெட், புல்ஃபாயில், இரவு ஹோட்டல்களில் நாம் விரும்பி சாப்பிடும் ஆஃபாயில் என ஏதோ ஒரு வகையில் முட்டையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. எனினும், பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஜனரஞ்சகமான வகை என்பது ஆம்லெட் தான். இதை சத்தான வகையில் மாற்றுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

காளான் ஆம்லெட் : முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுத்தூள், கொஞ்சம் பால் போன்றவற்றை கலக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி, சிறிது, சிறிதாக நறுக்கப்பட்ட காளான்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை முட்டை கலவையுடன் சேர்த்து, வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கி, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான காளான் ஆம்லெட் தயார்.

மசாலா ஆம்லெட் : மிக நைசாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டை கலவையில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கடாயில் வெண்ணெய் தடவி, இந்த முட்டை கலவையை கெட்டியாக ஊற்றவும். இப்போது மெது, மெதுவான தன்மையில் சூடான ஆம்லெட் தயாராகியிருக்கும்.

கீரை ஆம்லெட் : கீரை வகைகளில் மிக, மிக சத்து கொண்டது பாலக்கீரை ஆகும். இதை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எப்போதும் ஆம்லெட்டிற்கு கலக்கும் வகையில் வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, அதனுடன் கீரையை கொட்டி கலக்கவும். நல்லெண்ணெய் விட்டு இந்த ஆம்லெட்டை சுட்டு எடுக்கவும். பார்க்க அழகாக இருக்க மிளகாய் விதைகளை ஆம்லெட்டில் தூவி எடுக்கலாம்.

சீஸ் ஆம்லெட் : பாலாடைக் கட்டிகளை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுடன் உங்களுக்கு பிடித்தமான முட்டையை சேர்த்து ஆம்லெட் தயாரித்தால் எப்படி இருக்கும்! வழக்கமான ஆம்லெட் கலவையை தோசைக்கல்லில் ஊற்றி, அதன் மேல் லேயரில் இந்த பாலாடைக் கட்டிகளை தேய்த்து விடவும். பின்னர் எடுத்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

காய்கறி ஆம்லெட் : மற்ற ஆம்லெட் வகைகளைப் போல இதை எளிதில் செய்ய முடியாது. காரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை இந்த ஆம்லெட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம். முதலில், காய்கறியை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் ஆம்லெட் கலவையில் இதை சேர்த்து, லேசான தீயில் வேக வைத்து எடுக்கவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker