மட்டன் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாமா..? இதோ செய்முறை..!
மட்டன் வைத்து கிரேவி, சுக்கா, குழம்பு, பிரியாணி என பல ரெசிபிகளை செய்திருப்பீர்கள். ஆனால், எப்போதாவது மட்டன் வைத்து சமோசா முயற்சி செய்தது உண்டா.? ஆரோக்கியம் பல நிறைந்த மட்டன் வைத்து ஒரு அருமையான மினி மட்டன் சமோசா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கீமா – 1/2 கிலோ.
எண்ணெய் – 3 ஸ்பூன்.
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.
சீரக தூள் – 1 ஸ்பூன்.
தனியா தூள் – 1 ஸ்பூன்.
உப்பு – 1 ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்.
தண்ணீர் – 1/2 கப்.
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து (நறுக்கியது).
சமோசா சீட் செய்ய தேவையான பொருட்கள் …
மைதா – 2 கப்.
உப்பு – 1/2 ஸ்பூன்.
எண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை :
முதலில், ஃபில்லிங் செய்வதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதை தொடர்ந்து, விதை நீக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் மட்டன் கீமாவை சேர்த்து கலந்துவிடவும். அடுத்து கரம் மசாலா தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
இதை தொடர்ந்து, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது, சமோசா சீட் செய்ய ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்து, பின்பு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை 10 நிமிடம் பிசைந்து கொள்ளவும்.
கடைசியாக, மாவின் மீது எண்ணெய் தடவி மூடிவைத்து 30 நிமிடம் ஊறவிடவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்.
அடுத்து தோசைக்கல்லை சூடு செய்து அதில் தேய்த்த மாவை போட்டு 3 வினாடி இரண்டு பக்கமும் வேகவிடவும். பிறகு மாவை சதுரமாக வெட்டி பின்பு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
அடுத்து மாவை முக்கோண வடிவில் செய்து அதில் மட்டன் கீமாவை வைத்து, பின்பு மைதா மாவு பசையை வைத்து தேய்த்து மூடி மெதுவாக அழுத்திவிடவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சிறிது சூடானதும் அதில் தயார் செய்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க மட்டன் சமோசா தயார்!