மாதவிடாய் சுழற்சி சீராக உள்ளதா..? தெரிந்துகொள்ள இந்த 7 அறிகுறிகளை கவனியுங்கள்..!
பொதுவாகவே பெண்களில் பெரும்பாலானோருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களில் இருந்து இரண்டு வாரங்கள் முன்னதாகவே அதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கிவிடும். ஒவ்வொரு மாதமும் பெண்களின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை ஆனது கருத்தரிக்காத பட்சத்தில் அவை பெண்ணுறுப்பின் வழியாக வெளியேற்றப்பட்டு விடும். அந்த சமயத்தில் பெண்களுக்கு உண்டாகும் ரத்தப்போக்கு மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது.
சராசரியாக ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு முறை பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். மேலும் 90% மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதான உண்டாகும் அறிகுறிகளை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் மாதவிடாய்க்கு முன்னதான அறிகுறிகள் மிகவும் லேசாக இருப்பினும் சிலருக்கு இவை மிகவும் அதிக அளவில் உண்டாகி அன்றாட வேலைகளையே பாதிக்கும்படி ஆகிவிடும்.
மேலும் இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றில் அதிக அளவு மாற்றம் தெரியும் போது கண்டிப்பாக அதில் கவனம் செலுத்தி, ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதனை சரி செய்ய முயற்சி செய்வது நல்லது. அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்பதால் இதை கண்டறிவதில் சில சிரமங்கள் ஏற்படலாம்.
இதன் காரணமாகவே உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியானது ஆரோக்கியமாக உள்ளதா அல்லது ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை கண்டறிவதில் உங்களுக்கு குழப்பங்கள் உண்டாகலாம். மாதவிடாய் சுழற்சியானது சீராகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என்பதற்கான ஏழு அறிகுறிகளை இப்போது பார்ப்போம். இவை உங்களுக்கும் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை பற்றி நீங்கள் பெரிதாக கவலைப்பட தேவையில்லை.
அதிக அளவிலான ரத்தக்கட்டுகள் இல்லாமை: சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சியின் போது ரத்தக் கட்டுகள் ஏற்படுவது சாதாரணமானது தான். அவை அதிகப்படியாக ஏற்படாத பட்சத்தில் நீங்கள் அதைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை.
அதிக துர்நாற்றம் இல்லாமல் இருப்பது: மாதவிடாய் காலங்களின் போது வெளியேறும் ரத்தத்திலிருந்து சில சமயங்களில் ஒரு வித வாடை உண்டாகும். இது மிகவும் சாதாரணமானது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வாடையானது மிகவும் அதிகமாக இல்லாமலும், அதிக துர்நாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனில் நீங்கள் இதனை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.
அதிக வலி மற்றும் தசை பிடிப்பு: பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் போது வலி உண்டாவதும், தசை பிடிப்புகள் ஏற்படுவதும் வழக்கமானது. எனவே இதனை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. வலி அல்லது தசை பிடிப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது நல்லது.
சீரான ரத்தப்போக்கு: மாதவிடாய் காலங்களில் போது சீரான இடைவெளியில் சீரான அளவில் ரத்தப்போக்கு இருப்பது மிகவும் பொதுவான ஒரு நிகழ்வாகும். எனவே இதைப்பற்றியும் நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை. ரத்தப்போக்கின் அளவிலோ அல்லது நேரத்திலோ மாறுதல் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியிருக்கும்.
மாதவிடாய் நீடிக்கும் காலம்: பெண்களுக்கு மாதவிடாய் நடைபெறும் காலமானது பொதுவாகவே இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்களுடைய மாதவிடாய் நீடிக்கும் பட்சத்தில் அதனை பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.
மாதவிடாய் சுழற்சிக்குற்பட்ட காலங்களில் கரைகள் ஏற்படாமல் இருத்தல்: இரு மாதவிடாய் சுழற்சி கால கட்டங்களுக்கு இடையில் ரத்தக்கரைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் உங்களது மாதவிடாய் சுழற்சியை பற்றி நீங்கள் கவலை கொள்ளவே தேவையில்லை.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் காலம்: பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியானது ஒவ்வொரு 21 லிருந்து 35 நாட்களுக்கு ஒரு முறை உண்டாகும். எனவே சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு தினங்கள் அவை தள்ளிப் போனாலும் அவற்றை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.