ஃபேஷன்ஆரோக்கியம்உறவுகள்

உங்களுக்கு திருமணம் முடிவாகிடுச்சா..?அப்போ இன்றிலிருந்தே இந்த ஸ்கின்கேர் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க..!

வாழ்க்கையில் ஒரேயொரு முறை நடைபெறுகின்ற திருமணம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அதிலும், தன் வாழ்நாளிலேயே இல்லாத அளவுக்கு அன்றைய தினம் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம். ஆனால், ஆர்வ மிகுதியில் பெண்கள் மேற்கொள்கின்ற அதிகப்படியான மேக்கப் நடவடிக்கைகளால் எதிர்பார்த்த தோற்றம் கிடைக்காமல் போகலாம்.

இதுகுறித்து தோல் சிகிச்சை மருத்துவர் படூல் படேல் கூறுகையில், “நல்ல நாட்களில் கண்ணாடி போன்ற தெளிவான முகத்தோற்றம் வேண்டும் என்ற எண்ணமே பல சமயங்களில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். இதன் விளைவாக பருக்கள் ஏற்படலாம். மேக்கப் செய்தால் மட்டுமே திருமணத்தில் அனைவரின் கவனமும் நம் மீது இருக்கும் என்று நாம் கருதுவோம். எனினும், மேக்கப் கலைஞரை கொண்டு இதை கவனமாக செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அழகுக்கலை நிபுணர் ஜமுனா பாய் இதுகுறித்து கூறுகையில், “சரும பராமரிப்பு நடவடிக்கைகளை கடைசி நிமிடத்தில் செய்ய முடியாது. திருமண தேதி முடிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே அதை தொடங்கி விட வேண்டும். உங்கள் சருமத்திற்கு தகுந்த பிரத்யேக நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, முறையான தூக்கம், நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர், யோகா பயிற்சி போன்றவற்றை கடைப்பிடித்தால் சருமம் அழகாக காட்சியளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

புதிதாக எதுவும் முயற்சி செய்யக் கூடாது: திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், நாம் இதுவரை முயற்சி செய்திராத புதிய அழகுக்கலையை முயற்சித்து பார்க்க கூடாது. ஏனெனில் அது உங்களுக்கு மட்டும் அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பயன்படுத்தினால் உங்கள் சருமம் வறட்சி அடையலாம். சருமத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் வகையிலான ஃபேசியல் செய்யலாம்.

வேக்சிங்: முகம், முதுகு, மார்பு பகுதி ஆகிய இடங்களில் திருமணம் நெருங்கும் வேளையில் வேக்சிங் செய்யக் கூடாது. இது பருக்களை உண்டாக்கும் மற்றும் குணமடைய நாளாகும். 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பாகவே லேசர் மூலமாக முடி அகற்றும் பணியை மேற்கொள்ளலாம். அதுவும் படிப்படியாக இதனை மேற்கொள்ள வேண்டும்.

நுணுக்கமான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்: நம் கண் புருவம் அழகானதாக காட்சியளிக்க மைக்ரோ-பிளேடிங் சிகிச்சை மேற்கொள்வது பிரபலமானதாக இருக்கிறது. ஆனால், இதை திருமணத்திற்கு நெருக்கமான சமயத்தில் செய்தால் அலர்ஜி உண்டாகலாம். சுமார் 4 மாதங்களுக்கு முன்பாக இதனை செய்துவிட வேண்டும்.

மேக்கப் உடன் தூங்குவது : திருமணம் நெருங்கி வரும் நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களை தவிர்க்க இயலாது. எவ்வளவு தாமதமானாலும் மேக்கப்களை கலைத்துவிட்டு தான் தூங்க வேண்டும். இதைச் செய்ய தவறினால் உங்கள் சருமம் வறட்சி அடையலாம். அதேசமயம், கடுமையான அளவில் செயல்படும் மேக்கப் ரிமூவர்ஸ், ஆல்கஹாலிக் வைப்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker