மோரில் உப்பு கலந்து குடிப்பது தவறா..? யாரெல்லாம் குடிக்கவே கூடாது..?
காலை முதல் மாலை வரை கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும், அதீத வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்கவும் பல்வேறு பானங்களை குடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வீட்டிலேயே எளிதில் தயாரிக்க கூடிய அதே சமயம்பலரின் விருப்பமான பானமாக இருக்கிறது மோர். ப்ரோட்டீன் கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை மோர் நமக்கு வழங்குகிறது. எலும்பு ஆரோக்கியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் மோர் குடிப்பதால் நமக்கு கிடைக்கின்றன. மோரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, மேலும் வலுவூட்டப்பட்டால் (Fortified) வைட்டமின் டி-ன் மூலமாகவும் மோர் இருக்கும்.
கூடுதலாக Full-Fat டைப் மோர் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் கே2-வை கொண்டுள்ளது. இருப்பினும் மோரில் காணப்படும் அதிக உப்பு அளவுகள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு காரணமாக சிலருக்கு சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த கூடும். அதிக அளவு சோடியம் நுகர்வு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும், குறிப்பாக உப்புக்கு சென்சிட்டிவாக உள்ளவர்களுக்கு. மற்றொரு முக்கிய விஷயம் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் காரணியாக அறியப்படுகிறது.
இதற்கிடையே பிரபல மருத்துவர் ஜிதேந்திர ஷர்மா பேசுகையில், பெரும்பாலான மக்கள் சாப்பிட பிறகு உணவு செரிமானமாக வேண்டும் என்பதற்காக, சோம்பல், சோர்வு, வயிறு உப்பசம் மற்றும் வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மோர் குடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும் மோரின் சுவையை அதிகரிக்க அதில் உப்பு சேர்ப்பது வயிற்றை கடுமையாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். நிபுணரின் கூற்றுப்படி மோரில் உப்பு ஏன்சேர்க்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மோரில் உப்பு சேர்த்து குடிப்பது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என அறிவுறுத்துகிறார் டாக்டர் சர்மா. வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மோரில் உப்பு சேர்த்து குடிப்பதால், எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என்கிறார். இருப்பினும் உப்பு சேர்க்காமல் மோர் குடிப்பது பல நன்மைகளை கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
ஏனெனில் இதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது. தயிரை போலவே தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் மற்றும் லஸ்ஸி உள்ளிட்டவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை செய்யும் பண்புகளை கொண்டுள்ளன. ஆனால் சுவைக்காக மோரில் உப்பு சேர்ப்பது ப்ரோபயாடிக்ஸ்களின் செயல்பாடு மற்றும் செயல்திறனை குறைக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்கு வழிவகுக்கிறது.
மோர் யாரெல்லாம் சாப்பிட கூடாது.! பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட் , வாந்தி, மூச்சுத்திணறல் மற்றும் கடும் சந்தர்ப்பங்களில் அனாபிலாக்ஸிஸ் போன்ற பல அறிகுறிகளை சந்திக்க நேரிடலாம் என ஹெல்த்லைன் குறிப்பிட்டுள்ளது.
பாலில் காணப்படும் இயற்கை சர்க்கரையான லாக்டோஸ் மோரிலும் உள்ளது. எனவே தான் பால் குடித்தால் அலர்ஜியை சந்திக்கும் நபர்கள் மோரையும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத சில நபர்களுக்கு மோர் எளிதில் ஜீரணமாகலாம். ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத பெரும்பாலானோருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால் மோர் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.