உங்களுக்கு கால் ஆட்டும் பழக்கம் இருக்கா.. அப்போ முதல்ல இதைப் பண்ணுங்க!
சிலருக்கு சில பழக்கங்கள் சின்னவயதில் இருந்து தொடர்ச்சியாக இருக்கும். அவை நல்லவை அல்ல என்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாது. சிலர் முடியை பிடித்துக்கொண்டே தூங்குவார்கள். நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டே தூங்குவார்கள். அதே போல் உட்கார்ந்து கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கும்.
இதெல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் போது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் உடல் ரீதியாக பார்க்கும்போது அது சில உடல் கோளாறுகளை ஏற்படுத்தவும் சுட்டிக்காட்டவும் செய்கிறது. அதை கவனித்து நிவர்த்தி செய்யவேண்டியது ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடும்.
நண்பர்களுடன் பேசும் போது, புத்தகம் படிக்கும் போது, மொபைல் பயன்படுத்தும் போது… சிலர் கால்களை அசைத்துக் கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள் நீங்கள் கால்களை ஆட்டுவதைப் பார்த்தால், இதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் அதைத் தவிர்ப்பது சிரமமாக இருக்கும்.
ஆனால் உட்கார்ந்த நிலையில் கால்களை ஆட்டுவது நல்லதல்ல என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். இப்படி கால் ஆட்டும் பழக்கம் இருப்பதற்கு மன அழுத்தம், பதட்டம் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
இவை தவிர, சரியான தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை சிலருக்கு கால்களை அசைக்க காரணமாகின்றன. தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பவர்கள் அல்லது குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாகவே கால் ஆடுவதை பார்க்க முடியும்.
ஆனால் இந்தப் பழக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பலரையும் வாட்டி வதைக்கிறது. அது இரும்புசத்து குறைபாடு இருப்பதால் ஏற்படலாம் என்று பல மருத்துவர்கள் சொல்கின்றனர். இரும்புச் சத்து மாத்திரைகளைச் சரியாகச் சாப்பிட்டால் இந்தப் பிரச்னையைக் குறைக்கலாம்.
அது மட்டும் இல்லாமல் வாழைப்பழம் மற்றும் பீட்ரூட்டையும் இரும்புச்சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர். இது போன்ற நேரத்தில் டீ, காபி குடிக்கும் பழக்கம் கூட நல்லதாம். ஆனால் இதோடு சேர்த்து இரவில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பதைக் குறைத்து நன்றாக தூங்க வேண்டும்.