சுகர் இருக்கவங்க தர்பூசணி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா..?
கோடை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வரும் பழங்கள் மாம்பழம், பலாப்பழம், மற்றும் தர்பூசணிப் பழம் ஆகும். இவை அனைத்தும் சுவை மிகுந்தவை என்றாலும், தர்பூசணிப் பழம் மிகவும் சுவையானதாக இருப்பதோடு நமக்கு வெயில் காலத்திற்குத் தேவையான புத்துணர்ச்சியையும் அது தருகிறது. இதில் இயற்கை சர்க்கரைகள் அதிகமாக இருந்தாலும் கூட, சர்க்கரை நோய் இருப்பவர்கள் கூட மிதமான அளவில் இதனை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விருப்பம் தான்.
இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்து நிறைந்துள்ளது. அதனால் இது சமச்சீரான உணவில் கண்டிப்பாக நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஓரு உணவாகும். இதில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது, அதனால் நீர்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக அமைகிறது. எனவே, செரிமானத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மேலும், இதில் ஃபோலேட், பொட்டாசியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன.
தர்பூசணி பழத்தின் கிளைசெமிக் குறியீடு 72 ஆகும். இது மிதமானது முதல் உயர்வானது என்று கருதப்படுகிறது. ஆனால், தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், 120 கிராம் தர்பூசணி எடுத்துக் கொண்டால், அதன் கிளைசெமிக் லோட் 5 ஆக இருக்கும். எனவே, இதனை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானது தான்.
அதே சமயம், 300 கிராம் தர்பூசணிப் பழம் என்பது 15 கிராம் கார்போஹைட்ரேட் ஆகும். அதனால், நீங்கள் தர்பூசணிப் பழம் எடுத்துக் கொண்டால், உங்கள் உணவில் இருந்து 15 கிராம் கார்போஹைட்ரேட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி இனிப்பாக இருப்பதால் இது உங்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும். அதே வேளையில், இதனை உட்கொள்வது உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணரச் செய்யும்.
ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தர்பூசணிப் பழம் ஜுஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் அதிக கிளைசெமிக் லோட் இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதுமே மிதமான அளவில் மட்டுமே தர்பூசணிப் பழங்களை உட்கொள்ள வேண்டும்.