விளக்கெண்ணெய் முதல் முட்டை மஞ்சள் கரு வரை.. உங்கள் புருவத்தை அடர்த்தியாக்க உதவும் எளிய 7 டிப்ஸ்.!
சிலருக்கு தங்கள் புருவம் அடர்த்தியாக இல்லை, மெல்லியதாக இருக்கிறதே என்ற கவலை இருக்கும். இதில் நீங்களும் ஒருவரா.? உங்கள் மெல்லிய புருவத்தை அடர்த்தியான புருவமாக மாற்ற விரும்புகிறீர்களா..? இதற்கு வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன.
அடர்த்தியான புருவங்கள் சமீபத்திய ஆண்டுகளில் பியூட்டி ட்ரெண்டாக மாறிவிட்டன. மேலும் இளமைத் தோற்றத்தை அளிக்க அடர்த்தியான புருவங்கள் உதவுகின்றன. விளக்கெண்ணெய் முதல் முட்டை மஞ்சள் கரு வரை இயற்கை முறையில் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க பல எளிய வழிகள் உள்ளன.
வீட்டிலேயே இயற்கையான முறையில் புருவங்களை அடர்த்தியாக்குவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்… புருவங்களை இயற்கையான முறையில் அடர்த்தியாக்க உதவும் டிப்ஸ்கள் இங்கே..
விளக்கெண்ணெய் : ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெயில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலிக் ஆசிட் (Ricinoleic acid) உள்ளது, இது Prostaglandin E2 உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களது மெலிந்த புருவத்தை அடர்த்தியாக வளர செய்ய சுத்தமான மஸ்காரா அல்லது காட்டன் துணியை பயன்படுத்தி சிறிதளவு விளக்கெண்ணெயை புருவங்களில் தடவலாம். இரவு நேரத்தில் தடவி விட்டு காலையில் கழுவி விடலாம்.
தேங்காய் எண்ணெய் : உங்கள் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க மற்றும் ஊட்டமளிக்க உதவும் மற்றொரு இயற்கை ஆயில் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயில் முடி வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புருவங்கள் அடர்த்தியாக வளர உங்கள் புருவங்களுக்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சில மணி நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள்.
கற்றாழை : சருமத்தை மென்மையாக்க மற்றும் மாய்ஸ்ட்ரைஸ் செய்ய உதவுவதோடு, புருவங்களின் முடி வளர்ச்சியையும் கற்றாழை ஊக்குவிக்கும். ஃபிரெஷ்ஷான கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து உங்கள் புருவங்களில் தடவி கொள்ளுங்கள். சுமார் 30 நிமிடங்களுக்கு கற்றாழை ஜெல்லை அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள்.
முட்டை மஞ்சள் கரு : முட்டையின் மஞ்சள் கருவில் ப்ரோட்டீன் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது, இவை சிறந்த கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புருவ வளர்ச்சிக்கு பயோட்டின் இன்றியமையாத ஊட்டச்சத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களது புருவத்தை அடர்த்தியாக்க முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து, அதனை சுத்தமான மஸ்காரா அல்லது காட்டன் துணியை பயன்படுத்தி உங்கள் புருவங்களில் தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்கு மஞ்சள் கருவை புருவங்களில் அப்படியே வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள்.
வெங்காயச்சாறு : வெங்காயச்சாற்றில் கந்தகம் நிறைந்துள்ளது, இதனை புருவத்தில் பயன்படுத்தினால் முடி வளர்ச்சியைத் தூண்டும். புருவங்கள் அடர்த்தியாக வளர வெங்காயச் சாற்றை எடுத்து காட்டன் துணியைப் பயன்படுத்தி உங்கள் புருவங்களில் தடவி கொள்ளுங்கள். புருவங்களில் வெங்காய சாற்றை தடவி சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வெந்தய விதைகள் : வெந்தய விதைகளில் நிறைந்துள்ள புரதம் மற்றும் நிகோடினிக் ஆசிட் புருவங்களின் முடி வளர்ச்சிக்கு உதவும். முன்தினம் இரவு ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் காலையில் தண்ணீரில் நன்கு ஊறிய வெந்தய விதைகளை நன்கு விழுதாக அரைத்து எடுத்து அந்த பேஸ்ட்டை உங்கள் புருவங்களில் தடவி கொள்ளுங்கள். சுமார் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
மசாஜ் : உங்கள் புருவங்களை கைகளால் மசாஜ் செய்வது அங்கிருக்கும் மயிர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினசரி சில நிமிடங்களுக்கு உங்கள் புருவங்களை Circular motion-ல் விரல் நுனியால் மெதுவாக மசாஜ் செய்யவும்.